கள்ளச் சந்தை வியாபாரிகள், பதுக்கல் காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க விரைவு நீதி மன்றங்களை மாநில அரசுகள் அமைக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

பருவ மழையின் போக்கு, பணவீக்க நிலவரம் குறித்து தமது அமைச்சரவை சகாக்களுடன் ஆலோசனை நடத்திய போது பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:

பருவமழை போதியளவில் பெய்யா விட்டாலும் அதனால் வேளாண் உற்பத்தி பாதிப்புக்கு உள்ளாகக்கூடாது. அதை உறுதிப்படுத்த விவசாயிகளுக்கு போதிய பாசனவசதி, மின்சாரம், விதை வினியோகத்துக்கு ஏற்பாடு செய்திடல்வேண்டும்.

பருவமழை இப்போதைக்கு குறைந்துபோனாலும் அடுத்த இருமாதங்களில் வலுவடைய வாய்ப்புள்ளது. பணவீக்கத்தை (விலைவாசி உயர்வு) கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் விளைவு சாதகமாக உள்ளது.

500-க்கும் அதிகமான மாவட்டங்களில் வேளாண் அமைச்சகம் சிறப்பு செயல்திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இந்த பருவ மழை காலத்துக்கான செயல் திட்டங்களை அமல்படுத்துவதில் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையில் ஒருங்கிணைப்பு முயற்சி அவசியம். இந்தமுயற்சி மாநிலங்கள் அளவில் இல்லாமல் மாவட்டங்கள் நிலையில் இருப்பது சிறந்தது.

கள்ளச் சந்தை வியாபாரிகள், பதுக்கல் காரர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாநிலங்கள் விரைவு நீதி மன்றங்களை அமைக்க வேண்டும்.

விலைவாசியை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் சாதகமான பலனைகொடுப்பது தெரிகிறது. சந்தைகளில் அரிசி இருப்பு போதியளவில் உள்ளன. கிராமங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்க தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மழைநீர் சேகரிப்புக்கு சிறந்த நடைமுறைகளை கையாள்வதும் நீராதாரங்களை முழுமையாக பயன் படுத்திடவும் நடவடிக்கை எடுப்பது அவசியம். இவ்வாறு இந்தகூட்டத்தில் மோடி பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Leave a Reply