போரூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்துவிழுந்த இடத்தில் நடைபெறும் மீட்புப்பணிகளை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்கூறினார்.

மத்திய இணை அமைச்சரும் பா.ஜ.க. மாநில தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன், அடுக்குமாடி கட்டிடம் இடிந்துவிழுந்த இடத்துக்கு சென்று மீட்புப்பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டனர். அப்போது விபத்தில் காயம அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல்கூறினார்.

மேலும், மீட்புப் பணிகளில் துரிதமாக ஈடுபடுமாறு பேரிடர் மீட்புகுழுவினரை பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தசம்பவம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தும் ஒருநிகழ்வாக அமைந்துவிட்டது. இன்று (நேற்று) காலை இடிபாடுகளில் சிக்கிய ஒருநபர் உயிரோடு மீட்கப்பட்ட தகவல் அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். இனிமேல் மீட்கப்படும் ஒவ்வொரு நபரும் உயிரோடு இருக்கவேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.

இந்தகட்டிடம் உரிய அனுமதியோடு கட்டப்பட்டதா? முறைகேடுகள் எதுவும் நடந்துள்ளதா? என்று அரசு அதிகாரிகள் ஆய்வுசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த கட்டிட உரிமையாளர் இனி எந்த கட்டிடத்தையும் கட்ட அனுமதி தராமல் தடைவிதிக்க வேண்டும். அவர் மீது உரிய நடவடிக்கை வேண்டும். மீட்புபணிகளுக்கு கூடுதல் ஆட்களோ அல்லது உபகரணங்களோ தேவைப்பட்டால் மத்திய அரசிடம் இருந்து பெற்றுத்தருவோம்.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படவேண்டும். மாநில அரசு வழங்கும் நிவாரணத் தொகைக்கு ஏற்றார்போல் நிவாரணம் வழங்க மத்திய அரசை வலியுறுத்துவேன் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Tags:

Leave a Reply