‘சாக இருந்த இந்திய பொருளாதாரத்தை காப்பாற்றும் மருந்துபோல், மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள், நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாகவும், நாடுமுன்னேறும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்திலும் அமைந்துள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:சமுதாயத்தின் நலிவடைந்த ஏழைமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில், பட்ஜெட் அமைந்துள்ளது. சோதனையான கால கட்டத்தில் நாங்கள் பொறுப்பேற்ற நிலையிலும், ஏழைகள், நடுத்தரமக்கள், புதிய நடுத்தர மக்கள், நடுத்தரத்திற்கு மேல் உள்ள மக்கள் என, அனைத்து தரப்பினருக்கும், எங்களால் எவ்வளவு உதவிகளை செய்யமுடியுமோ, அதை செய்யப் போவதற்கான அறிவிப்பாக பட்ஜெட் அமைந்துள்ளது.

‘நாட்டை வளர்ச்சி பாதைக்கு இட்டுச்செல்வோம்’ என்ற எங்கள் குறிக்கோளில் சிறிதும் தவறாமல், சாகும்தருவாயில் உள்ள நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்றும் சஞ்சீவினி மருந்தாகவும், நாட்டின் கடைசி மனிதனுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் சூரிய உதயமாகவும் இது அமைந்துள்ளது.நாட்டின், 125 கோடி மக்களின் ஆதரவுடன், நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டுசெல்லும் வகையில், இந்த பட்ஜெட் உள்ளது.

திறமையான, தகவல் தொழில்நுட்ப பலம்பொருந்திய இந்தியா உருவாக, பட்ஜெட் வழிவகை செய்கிறது.மக்கள்சக்தியுடன், மக்கள் பங்களிப்பும் இணைய பட்ஜெட் ஊக்கமளிக்கும். விலைவாசி உயர்வால் அவதிப்படும் பெண்களின் துயரைத் துடைக்கும் வகையிலும், பெண்களுக்கும், பெண்குழந்தைகள் கல்விக்கும் ஊக்கமளிக்கும் வகையிலும் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.மத்தியில் பொறுப்பேற்றது முதல், நாட்டின் பொருளாதார நெருக்கடியை சரிசெய்ய முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. அந்த சந்தேகத்தை, ரயில்வே பட்ஜெட்டும், மத்தியபட்ஜெட்டும் போக்கியுள்ளன.விவசாயத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது; விவசாயிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ‘ஒருதுளி; ஒரு பயிர்’ என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டுள்ளோம்.ராணுவம், கங்கையை தூய்மைப்படுத்துவதற்கும் பட்ஜெட்டில் சிறப்புகவனம் அளிக்கப்பட்டுள்ளது. என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார் .

Leave a Reply