சட்டவிரோதமாக கட்டடங்கள் கட்டப் படுவதைத் தடுக்க புதிய விதிமுறைகள் வகுக்கப்படும் என, மத்திய நகர்ப்புறவளர்ச்சி, வீட்டு வசதித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

இது குறித்து பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: நாடுமுழுவதும் சட்டவிரோத கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், புதிய விதிமுறைகள் வகுக்கப்படும்.

பெங்களூரு, மும்பை, தில்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் சட்டவிரோத கட்டடங்கள் கட்டப்படுவது அதிகரித்துள்ளன. இதனால், விபத்துகள் அதிகரித்து வருகின்றன. எதிர் காலத்தில் கட்டடவிபத்துகள் நடைபெறாத வகையில், கட்டடங்கள் கட்டும்போது கடைப்பிடிக்க வேண்டிய புதிய விதிமுறைகள் வகுக்கப்படும்.

ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடிப்பதா? அல்லது ஒழுங்கு முறைப்படுத்துவதா? என்பது குறித்து புதிய விதி முறைகளில் தெரிவிக்கப்படும். இந்த புதிய விதி முறைகள் ஏற்கெனவே மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் வகுத்துள்ள விதிமுறைகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

பயங்கரவாதிகள், அவர்களின் வழிகாட்டிகள் நினைப்பதை பாஜக ஆட்சியில் நிறைவேற்றமுடியாது. எந்த பிரச்னையையும் சமாளிக்க மத்திய அரசு உயிர்ப்புடன் இருக்கிறது. நாட்டில் அமைதி, பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

பொருளாதாரத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. நாட்டில் ரூபாய் மதிப்பு குறைந்து, விலைவாசி உயர்ந்தும், தொழில்முதலீடுகள் இல்லாத நேரத்தில் தான் மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது. பொருளாதார நிலை சீரடைந்ததும் வருமான வரிச்சலுகைகள் தரப்படும் என்றார் வெங்கய்ய நாயுடு.

Leave a Reply