முன் தேதியிட்டு வரி விதிக்கும்முறை இனி இந்தியாவில் இருக்காது என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி உறுதிபட தெரிவித்தார். வரிவிதிப்பு தொடர்பாக ஏற்கெனவே நிலுவையில் உள்ள பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நடப்பு நிதி ஆண்டுக்கான மத்தியபட்ஜெட் மீதான உரைக்கு மக்களவையில் வெள்ளிக்கிழமை பதிலளித்து பேசிய ஜேட்லி, முன் தேதியிட்டு வரிவிதிக்கும் முறை இனி இருக்காது, புதிதாக வரிவிதிக்கும் முறைதான் இருக்கும் என்று கூறினார்.

முன் தேதியிட்டு வரி விதிக்கும் முறையை முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிதான் கொண்டு வந்தது என்றும் அவர் குற்றம் சாட்டினார். பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இந்த தவறுகளை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்றார். 2012-ம் ஆண்டு மூலதனம் மீதான ஆதாயத்துக்கு வரிவிதிக்கும் முறையை காங்கிரஸ் அரசு கொண்டுவந்ததோடு அதை 2007-ம் ஆண்டு முன்தேதியிட்டு வசூலிக்கப்படும் என்று அறிவித்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

முன் தேதியிட்டு வரிவிதிக்கும் முறையால் உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு நிறுவனங்கள் மத்தியிலும் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்று கூறிய ஜேட்லி, அந்நிய முதலீட்டாளர்கள் குறிப்பாக பிரிட்டனை தலைமையிடமாக கொண்டுசெயல்படும் வோடபோன் நிறுவன விவகாரம் முன்தேதியிட்டு வரிவசூலிப்பால் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

முன் தேதியிட்டு வரிவசூலிப்பது தொடர்பாக சட்டம் இயற்றுவது இந்திய இறையாண்மையாகும். அதை யாரும் கேள்விகேட்க முடியாது. இருப்பினும் இதை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். இதனால் ஏற்படும் பின் விளைவுகளை பற்றி ஆராயவேண்டும். அத்துடன் முதலீட்டு சூழலையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply