பிரதமராக பதவி ஏற்றபிறகு நரேந்திர மோடி நேற்று முதல்முறையாக மும்பை வந்தார். இங்குள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தை பார்வையிட்டு விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடினார்.

பிரதமராக பதவி ஏற்ற பிறகு நரேந்திரமோடி நேற்று முதல் முறையாக மும்பைவந்தார். டெல்லியில் இருந்து விமானம்மூலம் மும்பைவந்து இறங்கிய அவரை விமான நிலையத்தில் மராட்டிய கவர்னர் சங்கர நாராயணன், முதல்மந்திரி பிரிதிவி ராஜ் சவான் உள்ளிட்டோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

அதன்பின், பிரதமர் பாபா அணு ஆராய்ச்சிமையம் சென்றார். அங்கு அவரை அணு சக்தி துறையின் செயலாளரும், இந்திய அணு சக்தி ஆணைய தலைவருமான ஆர்.கே.சின்கா வரவேற்றார். பிரதமர் வருகையையொட்டி, பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பிரத்யேக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அணு ஆராய்ச்சி மையத்துக்குள் சென்ற பிரதமர், அந்த கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் அணு சக்திதுறை விஞ்ஞானிகளுடன் சிறிதுநேரம் கலந்துரையாடினார். மேலும் விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:-

அணு சக்தி துறையில் கூடுதல் மேம்பாட்டு திட்டங்களை நிறைவேற்றவேண்டும் எனில் அதிகப்படியான முதலீடுதேவை. அணு சக்தி திட்டத்துக்காக போதிய உள்கட்டமைப்பு வசதிகளை அளித்துவரும் தொழிற்சாலைகளின் பங்களிப்பு மென்மேலும் பெருகும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

தேசிய அளவிலான சுகாதாரம், திடக் கழிவு மேலாண்மை, நீர்சுத்திகரிப்பு, விவசாயம் மற்றும் உணவுபாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் அணு அறிவியலின் பங்களிப்பை மேம்படுத்த அணு ஆராய்ச்சிதுறை கூடுதல்கவனம் செலுத்தவேண்டும்.

ஆற்றல்பாதுகாப்பு என்பது சுத்தமான மற்றும் நம்பகத்தன்மையான ஆதாரங்களை சார்ந்து இருக்கிறது. எனினும், இந்தியாவின் துரிதமான மற்றும் நீண்ட கால திட்டங்களை அடைய இவை முட்டுக்கட்டையாக உள்ளன. அணு சக்தி துறையை பொறுத்த மட்டில் திறமைவாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் எப்போதும் பெறக்கூடிய வகையில் இருக்கவேண்டும்.

மேலும், அணுசக்தி பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம். அணு சக்தி திட்டத்தை பொறுத்தவரை இந்தியாவின் தரத்தை உலகளவில் நிலைநிறுத்த வேண்டும். இவை எல்லாம் சாத்தியம் ஆகவேண்டும் என்றால், அணுசக்தி தொடர்பான திட்டங்களை நடைமுறைப் படுத்துவதில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Tags:

Leave a Reply