நீதிபதிகளைத் தேர்வுசெய்யும் அதிகாரம் படைத்த “தேசிய நீதித்துறை ஆணையம்’ அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளின் கருத்துகள் கேட்கப்படும் என மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பாக மக்களவையில் அவர் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: “நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆணையம் அமைக்கும் சட்டமசோதா, 15ஆவது மக்களவை கலைக்கப்பட்டதை தொடர்ந்து காலாவதியாகி விட்டது. அதனுடன் தொடர்புடைய ஒருமசோதா மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது. தேசிய நீதித்துறை ஆணையம் அமைப்பதற்கான சட்ட முன் வரைவு தொடர்பாக தலைசிறந்த நீதிபதிகள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோரின் கருத்தைக்கேட்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது’ என்றார் ரவி சங்கர் பிரசாத்.

2003-ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்த போது, “கொல்லேஜியம்’ எனப்படும் நீதிபதிகள் அடங்கிய தேர்வுக்குழு முறைக்குப் பதிலாக நீதிபதிகள் நியமன ஆணையத்தை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும், அந்தமுயற்சி வெற்றி பெறவில்லை. அப்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஓர் அரசியல் சாசனத்திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தியது. அம்மசோதா நிலை குழுவின் பரிசீலனையில் இருந்தபோது மக்களவை கலைக்கப்பட்டது. அப்போது, சட்டத்துறை அமைச்சராக அருண் ஜேட்லி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Leave a Reply