நீதிபதிகள் நியமனம் தொடர்பான மசோதாகுறித்து மத்திய அரசு பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த தொடங்கியுள்ளது.

தலைமை நீதிபதி தலைமையில் மூத்தநீதிபதிகள் குழுவின் பரிந்துரை அடிப்படையில் உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றனர்.

இந்தமுறையை மாற்றுவது தொடர்பாக, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். நீதிபதிகள் நியமன ஆணையம் அமைப்பது குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்டறியும்பொருட்டு அமைச்சர் இக்கடிதத்தை எழுதியுள்ளார்.

கடந்த 2003-ஆம் ஆண்டு, நீதிபதிகள் நியமனமுறையை மாற்றுவதற்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முயற்சி எடுத்தது.

இதுதொடர்பாக, அரசியல் சட்டத்திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டு, மக்களவையின் நிலைக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு வந்தது. ஆனால், முடிவு எதுவும் எடுக்கப்படும் முன்னர், மக்களவையின் பதவிக் காலம் முடிந்து தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், நீதிபதிகள் நியமன ஆணையம் அமைப்பது குறித்து, பல்வேறு அரசியல்கட்சிகள் மற்றும் மூத்த வழக்குரைஞர்களின் கருத்துகளை மத்திய அரசு கேட்டறியவிருக்கிறது என்று சட்டஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பணிநீட்டிப்பு வழங்குவது தொடர்பாக, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனக் குழுவுக்கு நெருக்குதல் அளிக்கப்பட்ட விவகாரம் பெரும்சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் பாஜக தலைமையிலான அரசு இந்த நடவடிக்கையை தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply