நதிகளை இணைப்பதற்கான திட்டத்தை விரைவாக தயாரித்துதரும்படி நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு மத்திய குடிநீர்த் துறை கடிதம் எழுதி இருக்கிறது.

பாராளுமன்ற தேர்தலின்போது, பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையில் தேசியநதிகளை இணைப்போம் என்று அறிவித்து இருந்தது. இதன், முதல்கட்டமாக அருகருகே உள்ள மாநில நதிகளை இணைப்பதற்கான முயற்சிகளை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தலைமையிலான குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து, மத்திய நீர்வளம் மற்றும் நதிகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உமாபாரதிக்கு குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் செயலாளர் பங்கஜ்ஜெயின் ஒருகடிதம் எழுதி இருக்கிறார். ஜூலை 15–ந் தேதியிட்ட அந்த கடிதத்தின் நகல் ஒன்று, பிரதமர் அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தற்போது சிலமாநிலங்களில் தண்ணீர்தேவை அதிகரித்து கொண்டேசெல்கிறது. குடிநீர் பற்றாக்குறையும் பல மாநிலங்களில் மிக கடுமையாக காணப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம், நீர்த்தேக்கங்கள், அணைகள் போன்றவற்றின் நீர் ஆதாரம் வேகமாக குறைந்துகொண்டே போவது தான் இதற்கான முக்கிய காரணங்கள். இந்த மாநிலங்களில் கடும்வறட்சி போன்றதொரு நிலை உருவாகி இருக்கிறது.

எனவே, எதிர்காலத்தில் நீர் ஆதாரத்தை பெருக்கும்வகையில் நதிகளை இணைக்கும் வகையிலான திட்டம் நமக்குதேவை. மேலும், நாட்டில் உள்ள நீர்பாதை முறைகளை சீரமைத்தும், கடலில் நீர் வீணாககலப்பதை தடுத்து சேமிப்பதன் மூலமும் நீர்மட்டத்தை மேற்பரப்புக்கு கொண்டு வர இயலும்.

குறிப்பாக ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தங்களின் அதிகமான நீர்தேவை குறித்து அடிக்கடி கோரிக்கை விடுத்து வருவது மத்திய அரசை கவலை கொள்ளச் செய்துள்ளது. நிலத்தடி நீரை தொடர்ந்து பயன் படுத்துவதால் நீர்மட்டம் வேகமாக குறைந்துகொண்டே போவது குறித்து இந்த மாநிலங்கள் வருத்தம் தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக இந்தமாநிலங்கள் நிலத்தடி நீரை பயன் படுத்துவதற்கு கடுமையான எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன. எனவே பல்வேறு மாநிலங்களின் நீர் ஆதாரம் மற்றும் குடி நீர் தேவையைக் கருதி நதிகளை இணைப்பதற்கான திட்டத்தை தங்களது அமைச்சகம் விரைவாக தயாரித்து தரும்படி கேட்டுக் கொள்கிறோம். என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply