மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வரும் ஆகஸ்ட் 24ம் தேதி நடத்தவுள்ள “குரூப்-1′ முதல்நிலை தேர்வை வேறுதேதிக்கு ஒத்திவைக்கும் வாய்ப்புகுறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி ஆகியோருடன் மத்திய பணியாளர் நலன், பயிற்சித்துறை இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தில்லியில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.

அப்போது, யுபிஎஸ்சி குரூப்-1 தேர்வில், ஆங்கிலமொழியில் பதில் அளிப்போருக்கு மட்டுமே பலன் தரும் வகையில் திறனாய்வு தேர்வுமுறை இருப்பதாகக்கூறி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கடந்த சில வாரங்களாக நடத்திவரும் போராட்டம் தீவிரம் அடைந்து வருவது குறித்தும், யுபிஎஸ்சி தேர்வு முறை தொடர்பாக ஆய்வு நடத்திவரும் மூவர்குழு குறித்தும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் யுபிஎஸ்சி உயரதிகாரிகள், மத்திய அரசுத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடியை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அவரது அலுவலகத்தில் திங்கிழமை பகல் வேளையில் சந்தித்துப்பேசினார். அப்போது, யுபிஎஸ்சி தேர்வு முறையை மாற்றக்கோரியும், தேர்வைத் தள்ளிவைக்கக் கோரியும் தேர்வு எழுதுவோர் நடத்தும் போராட்டம், உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன் பூரில் அமைதிநிலை திரும்பியிருப்பது ஆகியவை தொடர்பாக, நரேந்திரமோடியிடம் ராஜ்நாத்சிங் விளக்கினார். சுமார் 30 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து, மீண்டும் உள்துறை அமைச்சகம் திரும்பிய ராஜ்நாத்சிங், செய்தியாளர்களிடம் கூறியது:

மூவர்குழு அறிக்கை எந்தநேரத்திலும் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படலாம். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தேர்வெழுதும் ஆர்வலர்கள் இன்னும் சிலநாள்கள் பொறுத்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு நல்லமுடிவை எடுக்கும் என்றார்.

Leave a Reply