உற்பத்தியை அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தைபெருக்க, அறிவியல் தொழில் நுட்பத்தை வயலுக்கு கொண்டு செல்லுங்கள் என வேளாண் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் 86-ஆவது நிறுவன தினத்தையொட்டி, புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது .

வேளாண்துறை மேம்பாட்டுக்கு, “ஆய்வகத்திலிருந்து விளைநிலத்துக்கு’ எனும் புதிய முழக்கத்தை முன்வைத்து அவர் மேலும் பேசியதாவது: உலக அளவில் வானிலை மாற்றங்களால் இயற்கைவளங்கள் குறைந்து வருகின்றன. எனவே, கூடுதல் அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, குறைந்த நிலப்பரப்பில், குறைந்தகால அளவில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யவேண்டும்.

விவசாயிகளின் வருவாய் பெருக, அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தியை பெருக்கி, அதன் மூலமாகத் தங்களது வருவாயை அதிகரிக்க விவசாயிகள் திட்டமிடவேண்டும்.

அறிவியல் ஆராய்ச்சியின் பலன்களை நாம் விவசாய நிலத்துக்கு கொண்டுசேர்க்க வேண்டியுள்ளது. வேளாண் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் வானொலி நிலையங்கள் அமைத்து, புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளிடையே கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

நமது நாட்டினருக்கு மட்டுமல்லாது, உலகில் உள்ள அனைவருக்கும் உணவளிக்கும்வகையில் நமது விவசாயிகளுக்குத் திறன்மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது, இத் துறையை அவர்களுக்கு மிகவும் லாபகரமாக்குவது ஆகிய இருசவால்கள் நம்முன் உள்ளன.

விவசாயிகளின் வருவாய் அதிகரித்தாலொழிய, வேளாண்துறை இலக்குகளை எட்டமுடியாது. இதனை உணர்ந்து அரசு கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.

நீர்வளம் குறைந்து வரும் பிரச்னையை அடுத்து, “ஒவ்வொரு துளியிலும் கூடுதல் பயிர் விளைச்சல்’ என்ற கொள்கையுடன் நாம் செயல்பட வேண்டும். தரத்தில் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல், குறைந்த கால அளவில் பயிர்களை விளைவிக்க முயற்சியெடுக்க வேண்டியுள்ளது.

புதிய உத்திகள் எவ்வாறு நமக்கு கூடுதல்பலனை அளிக்கும் என்பது குறித்து, விவசாயிகள் ஏற்றுக் கொள்ளும்படியாக, எளியமுறையில் எடுத்துச் சொல்லவேண்டும். “ஆய்வகத்திலிருந்து விளைநிலத்துக்கு’ எனும் வகையில், வேளாண் ஆராய்ச்சியை அவர்களிடம் எடுத்துச்செல்லும் சவாலை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

நமது நாடு வேளாண் துறை சார்ந்த பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், பருப்பு, எண்ணெய் வகைகளை இன்னமும் நாம் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்துவருகிறோம். அதிக புரதச்சத்துள்ள பருப்பு வகைகளின் உற்பத்தியை பெருக்கி, ஏழை எளியமக்களுக்கு அவை சென்றடையச் செய்யவேண்டும்.

நீலப் புரட்சி: மீன் வளத்துறைக்கு உலக அளவில் பெரும் சந்தை உள்ளது. இந்த துறையை மேம்படுத்துவதால், நமது மீனவர்களின் நிலையை உயர்த்தலாம். பசுமைப்புரட்சி, வெண்மைப் புரட்சியைக் கண்டுள்ள நாம் அடுத்ததாக, மீன்வளத்தின் மேம்பாட்டுக்காக “நீலப்புரட்சியை’ ஏற்படுத்த வேண்டும் என்றார் பிரதமர் மோடி.

விழாதொடங்குவதற்கு முன்னதாக, நாட்டின் வேளாண் உற்பத்திக்கு முக்கிய பங்களித்துவரும் விவசாயிகளைப் பாராட்டும்வகையில், அரங்கில் உள்ள அனைவரும் எழுந்து கரவொலி எழுப்பவேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார்.

Tags:

Leave a Reply