வளரும் நாடுகள் சந்தித்துவரும் சவால்களை வளர்ந்த நாடுகள் புரிந்து கொள்ளவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகவர்த்தக அமைப்பு சார்பாக கொண்டுவரப்பட்ட தாராளமய வர்த்தக ஒப்பந்தம் தோல்வி அடைந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் இவ்வாறு கருத்து கூறியுள்ளார்.

ஒப்பந்தம் தோல்வி அடைய இந்தியா தான் காரணம் என அமெரிக்கா உள்ளிட்ட சிலநாடுகள் புகார் தெரிவித்த நிலையில், இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான்கெர்ரி, பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது உலகவர்த்தக அமைப்பின் ஒப்பந்தம் தோல்வி அடைந்ததற்கு இந்தியா காரணமல்ல என்று மறுத்த பிரதமர் மோடி, வளரும்நாடுகள் ஏராளமான சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில் அவற்றை தீர்க்கும் பொறுப்பு வளர்ந்த நாடுகளுக்கு உள்ளது என்றும் தெரிவித்தார்.

சர்வதேச அமைப்புகள் முக்கிய முடிவுகளை எடுக்கும் போது, ஏழ்மை ஒழிப்பில் வளரும் நாடுகள் சந்திக்கும் பிரச்னைகளை கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் ஜான் கெர்ரியிடம் பிரதமர் வலியுறுத்தினார்.

உணவு தானியங்களை தாராளமாக வர்த்தகம் செய்துகொள்ள வகைசெய்யும் இந்த ஒப்பந்தத்தில், மொத்த உற்பத்தியில் 10 சதவிகிதத்துக்கு மேல் அரசு கொள்முதல் செய்யக் கூடாது என்று கூறப்பட்டிருந்தது. அதோடு, உணவு மானியங்களை கைவிடவும் வலியுறுத்தப்பட்ட நிலையில், ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுத்துவிட்டதால் உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தம் நிறைவேறவில்லை.

Leave a Reply