திருவள்ளுவர் தினத்தை அனைத்து இந்தியமொழிகள் தினமாக அறிவிக்க வேண்டும்; உலகின் தொன்மைவாய்ந்த தமிழ் மொழியின் சிறப்பை இளம் தலை முறையினர் அறிந்துகொள்ளும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளில் தமிழை பயிற்றுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாநிலங்களவையில் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் தருண் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

மாநிலங்களவையில் தமிழ்மொழிக்கு ஆதரவாக தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் கூட இதுபோன்ற கோரிக்கையை இதுவரை முன்வைத்ததில்லை. இந்நிலையில், வடமாநிலத்தை சேர்ந்த உறுப்பினர் இத்தகைய கருத்தை வெளியிட்டிருப்பது தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த உறுப்பினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர் தருண் விஜய் பேசியதாவது. வரலாற்றுச் சிறப்புவாய்ந்த இந்திய மொழிகள் தனித்தன்மையும், சிறப்பும் வாய்ந்தவை. அந்தவகையில், வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தென்மாநிலங்களில் உள்ள ஏதேனும் ஒருமொழியை விருப்ப மொழியாகக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

உதாரணமாக, தமிழ்மொழியில் எழுதப்பட்ட தொல்காப்பியம் 5,000 ஆண்டுகளுக்கும் பழைமையானது. அதேபோன்று , சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி போன்றவை தமிழ் இலக்கியம் நமக்களித்த மாபெரும் காப்பியங்களாகும்.

தமிழ் இலக்கியத்தின் பெருமையை சந்தேகத்துக்கு இடமின்றி உலகுக்கு பறை சாற்றுவது கம்பரின் “ராமாயணம்’ ஆகும். அதே போல, இன்றைய காலகட்டத்துக்கும் உரித்தாகும்வகையில் அமைந்த சிறந்த படைப்பு, திருவள்ளுவரின் “திருக் குறள்’ ஆகும். திருக்குறளின் சுவடுகள் உலகம்முழுவதும் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.

நம் நாட்டில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் உலகளவில் கொண்டிருந்த செல்வாக்கும், அவர்கள் சமூகத்துக்கு ஆற்றிய நற்சேவையும் நம்மில் எத்தனைபேருக்கு முழுமையாக தெரியும்? அசோகரும், விக்ரமாதித்யர் போன்ற மாபெரும் சக்கரவர்த்திகளும் மட்டும் தான் இந்தியா எனக் கருதிக் கொள்ளக்கூடாது. சோழர்கள், கிருஷ்ணதேவராயர், பாண்டியர்கள் போன்ற மரியாதைக்குரிய மன்னர்களையும் நமது வரலாறு கண்டுள்ளது.

அதேபோல, வங்கம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பிறமொழிகளுக்கும் பெருமைமிகு வரலாறுகள் உள்ளன.

இந்நிலையில், இந்தியமொழிகளுக்கு எல்லாம் மரியாதை அளிக்கும் வகையில், திருவள்ளுவர் பிறந்த தினத்தை “இந்திய மொழிகள் தினம்’ என கடைப்பிக்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவேண்டும். அதேபோல, தேசிய ஒற்றுமையை உணர்த்திடும் வகையில் வடமாநிலங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தமிழை விருப்பப்பாடமாக மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் வாய்ப்பை மத்திய அரசு உருவாக்க வேண்டும்’ என்று தருண் விஜய் குறிப்பிட்டார்.

தருண் விஜய் உத்தரகண்ட் மாநிலத்தின் முன்னணி பாஜக தலைவர்களில் ஒருவர். அடிப்படையில் இவர் ஒரு பத்திரிக்கையாளரும் கூட. ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜி அறக்கட்டளையின் இயக்குநராக இருக்கும் அவர், 2010-இல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply