அண்டை நாடான நேபாளத்திற்கு நேற்றுசென்ற, பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் விமான நிலையத்தில், பிரதமர் சுஷில்கொய்ராலா தலைமையில், மிகவும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேபாள பார்லிமென்டில் உற்சாகமாகவும் , மகிழ்ச்சியாகவும் உரையாற்றிய மோடி,

‘இரு நாட்டுக்கும் இடையேயான பாரம்பரிய உறவு, இமய மலையை விட பழமையானது’ என்று , குறிப்பிட்டார்.

கடந்த மே 26ல், பிரதமராக பொறுப்பேற்ற, நரேந்திர மோடி, தன் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக, அண்டை நாடுகளில் ஒன்றான பூடான் சென்றார். அதன் பின், தன் இரண்டாவது வெளிநாட்டு சுற்றுப்பயணமாக, மற்றொரு மிக நெருங்கிய அண்டை நாடான நேபாளத்திற்கு நேற்று சென்றார்.

டில்லியில் இருந்து நேற்று புறப்படும்முன், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில், ‘பிரதமராக பொறுப்பேற்ற சில மாதங்களில், நேபாள சுற்றுப் பயணம் மேற்கொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது’ என, தெரிவித்தார்.

டில்லியிலிருந்து காலை, 10:00 மணியளவில் சிறப்புவிமானத்தில் நேபாளம் புறப்பட்ட மோடி, காலை, 10:45 மணிக்கு, நேபாளத்தின் திரிபுவன் நகரவிமான நிலையத்தில் தரையிறங்கினார். விமான நிலையத்திற்கே வந்த, அந்நாட்டின் பிரதமர் சுஷில்கொய்ராலா, மோடியை கட்டித்தழுவி வரவேற்றார்.

வழக்கமாக, பிறநாட்டின் தலைவர்களை, அந்நாட்டின் பிரதமர், விமான நிலையம்வந்து வரவேற்பது இல்லை. மோடிக்காக, மரபைமாற்றினார்,பிரதமர் சுஷில் கொய்ராலா.விமான நிலையத்தில், அந்நாட்டு ராணுவத்தினர், 19 குண்டுகள் முழங்கியும், ராணுவ அணிவகுப்பு மரியாதை அளித்தும் வரவேற்றனர். திரிபுவன் விமான நிலையத்திலிருந்து, 10 கிமீ., துாரத்தில், காத்மாண்டு நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு காரில்சென்ற மோடியை, சாலையின் இருபுறமும் நின்றிருந்த பள்ளி குழந்தைகள் மற்றும் கிராம மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

பிரதமர் மோடியுடன், தேசியபாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவால், வெளியுறவுத்துறை செயலர் சுஜாதாசிங் மற்றும் அதிகாரிகள் சென்றுள்ளனர். நேபாளம் வந்தஉடனேயே, அதிகாரப் பூர்வ சந்திப்புகள் மற்றும் பேச்சு வார்த்தையை, பிரதமர் மோடி துவக்கிவிட்டார். தலை நகர் காத்மாண்டுவில் உள்ள தலைமை செயலகத்தில், அந்நாட்டின் பிரதமர், சுஷில் கொய்ராலாவை சந்தித்தார்.அந்நாட்டு மக்களுக்கு ஏற்படும் அயோடின் குறைபாட்டை போக்க, தேவையான, அயோடின்கலந்த உப்பு வழங்குவது உட்பட, மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

இதைத் தொடர்ந்து நேபாள நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார். நேபாள மொழியில் தொடக்க உரையாற்றிய அவர், எம்.பி.க்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். தொடர்ந்து அவர் இந்தியில் பேசியதாவது:

நேபாளம் ஒரு புண்ணியபூமி. இங்குதான் புத்தர்பிறந்தார். இதற்கு முன்பு யாத்ரீகனாக நேபாளத்துக்கு வந்துள்ளேன். இப்போது இந்தியப்பிரதமராக மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.இந்தியாவுக்கும், நேபாளத்திற்கும் உள்ள பாரம்பரிய தொடர்பு, இமய மலை மற்றும் கங்கை நதிக்கும் பழமையானது. இமய மலை உயரத்திற்கு, நேபாளம் உயர வேண்டும்.

நேபாளத்தின் உள்விவகாரங்களில் இந்தியா ஒருபோதும் தலையிடாது. இருநாடுகளும் கங்கை, பிரம்மபுத்திரா போன்று மிகநீண்ட நெடிய உறவைக் கொண்டிருந்தும் 17 ஆண்டுகளுக்குப் பிறகே இந்திய பிரதமராக நான் நேபாளம் வந்துள்ளேன். இந்தத்தவறு இனிமேல் நடைபெறாது.

நேபாளத்தின் உள்கட்டமைப்பு, எரிசக்தி திட்டங்களுக்காக ரூ.6,000 கோடி கடனுதவி வழங்கப்படும். சார்க் நாடுகளில் இன்னமும் வறுமை நீடிக்கிறது. இந்த அவலத்தைப் போக்க சார்க் உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து வறுமைக்கு எதிராகப் போர்தொடுக்க வேண்டும்.

இந்தியாவின் பாதுகாப்பிற்கு, நேபாளிகள் ஆற்றியுள்ள சேவை மகத்தானது. சாவைக் கண்டு நான் அஞ்ச மாட்டேன் என யாராவது ஒருவன் கூறுகிறான் என்றால், அவன் பொய் சொல்ல வேண்டும்; இல்லையேல், கூர்க்காவாக இருக்க வேண்டும் என, சுதந்திர இந்தியாவின் ராணுவ தளபதி, சாம் மானக்சா கூறியுள்ளதை இங்கு நினைவுகூருதல் வேண்டும். இந்தியாவுக்காக உயிர்த்தியாகம் செய்த கூர்க்கா வீரர்களுக்காக இந்த நேரத்தில் வீரவணக்கம் செலுத்துகிறேன இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

Leave a Reply