நேபாளத்துக்கு 2 நாட்கள் அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தான் 16 ஆண்டுகளாக பராமரித்து வந்த அந்நாட்டு வாலிபர் ஒருவரையும் அழைத்துசென்று அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தார்.

பிரதமர் நரேந்திரமோடி, 2 நாள் பயணமாக நேபாளத்துக்கு சென்றுள்ளார். அவருடன் ஜீத்பகதூர் என்ற 26 வயது நேபாள வாலிபர் ஒருவரும் உடன் அழைத்து சென்றார். இதுகுறித்து மோடி தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு வேலைதேடி ஜீத்பகதூர் என்ற 10 வயது நேபாள சிறுவன், இந்தியாவந்தான். குஜராத்தில் மொழி புரியாமல், வேலை எதுவும் கிடைக்காமல் தவித்த ஜீத் பகதூரை என்னிடம் பெண் ஒருவர் அழைத்துவந்தார். கடவுளின் அருளால் அந்த சிறுவனுக்கு நான் உதவினேன்.

தற்போது ஜீத்பகதூர் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்த நிலையை அடைந்துள்ளார். தற்போது, நேபாளத்தில் உள்ள அவரது பெற்றோர் அடை யாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடம் ஜீத் பகதூரை ஒப்படைக்க முடிவுசெய்தேன். எனவே இந்த பயணம் தனிப்பட்ட முறையில் எனக்கு உணர்வுப் பூர்வமான பயணம் என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ஜீத்பகதூரின் கால்களில் ஆறு விரல்கள் உள்ளன. எனவே அதைக் கொண்டு தான் அவரது பெற்றோரை கண்டுபிடிக்க முடிந்தது என்று டுவிட்டரில் கூறியுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஜீத்பகதூரின் மூத்த சகோதரர் தஷ்ரத் கூறுகையில், எங்களைவிட்டு பிரிந்து சென்ற தம்பி ஜீத் பகதூர் பல ஆண்டுகளுக்கு பிறகு நேபாளம்வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று கண்ணீர் மல்க கூறினார். இந்நிலையில், நேற்றுகாலை காத்மாண்டு சென்ற மோடியை ஜீத்பகதூரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் சந்தித்தனர். அவர்களிடம் ஜீத் பகதூரை ஒப்படைத்தார் மோடி. அவர்கள் ஜீத்பகதூரை ஆரத்தழுவி மகிழ்ந்தனர். தங்கள் மகனை நல்ல நிலைக்கு கொண்டுவந்த மோடிக்கு நன்றி தெரிவித்தனர். மோடியுடன் அவர்கள் புகைப்படம் எடுக்க விருப்பம்தெரிவித்தனர். இதனால், அவர்களுடன் சேர்ந்து மோடி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அப்போது ஜீத் பகதூர் தாய் காகிசராவிடம் மோடி, ”நீங்கள் இப்போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்? எத்தனையோ வருடங்களுக்கு முன் பிரிந்த மகனை இப்போது பார்த்தாகி விட்டது. இனி நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

இந்நிலையில் பி.டி.ஐ. செய்தியாளரிடம் ஜீத் பகதூர் கூறுகையில், “”பிரதமர் மோடியை நான் சந்தித்த 10ஆவது வயதில் இருந்து என்னை அவரது இளைய சகோதரராகவே பார்த்தார். என் தாய் கூட இந்த அளவுக்கு எனக்கு நல்லது செய்திருப்பாரா என்று தெரியவில்லை.

ஒரு முக்கிய பிரமுகருடன் வாழ்ந்திருப்பதை எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுகிறேன். ஆனால், நான் பெரிய இடத்தில் வாழ்ந்து வந்ததாக ஒருபோதும் கர்வப்பட்டதில்லை” என்றார்.

நேபாள நாட்டைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஜீத் பகதூர் 1998–ம் வருடம், தனது சகோதரர் தசரத் என்பவருடன் பிழைப்பு தேடி இந்தியாவுக்கு வந்தார் . ஆனால் அவர் தனது சகோதரரை பிரிய நேரிட்டது. யாருமில்லாத நிலையில், அவர் ஆமதாபாத் வந்தார் . அப்போது அந்தச் சிறுவனை ஒரு பெண், இன்றைய பிரதமரான நரேந்திர மோடியிடம் அழைத்துச் சென்றார்.

யாருமற்ற நிலையில் அந்தச் சிறுவன் இருப்பதை அறிந்த மோடி, அவன் மீது இரக்கம் காட்டி அவனைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றார். அவனை வளர்த்தார். அவனுக்கு தேவையான எல்லா வசதிகளையும் செய்து தந்தார். படிக்க வைத்தார். ஆமதாபாத் கல்லூரியில் இப்போது ஜீத் பகதூர் இரண்டாம் ஆண்டு பி.பி.ஏ. மாணவர்.

இதற்கிடையே ஜீத்பகதூரின் குடும்பம், பெற்றோர் பற்றிய தகவல்களை மோடி திரட்டினார். அவரது குடும்பம், நேபாளத்தில் நவால் பராஸ் மாவட்டம் லோகஹா என்ற கிராமத்தில் உள்ள ஒரு குடிசைப்பகுதியை சேர்ந்தது என தெரியவந்தது.

Leave a Reply