தமிழக பாஜக தலைவர்கள் குழு, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று டெல்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து இலங்கை பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

தமிழக பாஜக தலைவர், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் கட்சியின் தமிழகபொறுப்பாளர் முரளிதர்ராவ், முன்னணி தலைவர்கள் இல.கணேசன், மோகன்ராஜுலு, டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், எச்.ராஜா, ஆகியோர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை டெல்லியில் சந்தித்தனர்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் பத்திரிகையாளர்களிடம் இல.கணேசன் கூறியதாவது:

தமிழக மீனவர்கள் கடல் எல்லையில் சந்தித்துவரும் பிரச்சினைகள், இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு, இந்தியாவுக்கு வரும் இலங்கை அகதிகள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசித்தோம். தமிழக மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதில் வெளியுறவுத்துறை அமைச்சர் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்.

மீனவர்களின் பிரச்சினை குறித்து அவர் தன்னுடைய ஆழ்ந்த கவலையை தெரிவித்தார். இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பதில் பிரதமர் மோடி குறிப்பாக இருக்கிறார். போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள், உரிமைகளை இழந்திருக்கிற மலையக தமிழர்கள், இந்தியாவுக்கு வந்துள்ள அகதிகள் குறித்தும் எடுத்துச் சொன்னோம். தமிழர்களுக்கு சமஉரிமை கிடைக்கும் வகையில் அங்கு சட்டதிருத்தங்களை மேற்கொள்ள இலங்கை அரசை வற்புறுத்தவேண்டும் என்றும் கூறியிருக்கிறோம்.

16ம் தேதி சென்னையில் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் மீனவர்களுடன் சந்திப்பு நடக்க இருக்கிறது. வெளியுறவுத் துறை அமைச்சருடன் தமிழக மீனவர்கள் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு இல.கணேசன் கூறினார்.

Leave a Reply