முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் இடம் பெற்றுள்ள அறக்கட்டளை மீதான குற்றச்சாட்டு குறித்து தேவைப்பட்டால் போலீஸார் வழக்குப்பதிய உத்தரவிடப்படும் என்று மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் கூறினார்.

இதுகுறித்து மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது அவர் கூறியதாவது: அரசு மானியங்களை தொண்டுநிறுவனங்கள் மோசடி செய்வதாக 26 புகார்கள் வந்துள்ளன. முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான்குர்ஷித் அங்கத்தினராக உள்ள டாக்டர் ஜாகீர் உசேன் நினைவு அறக்கட்டளைக்கு, 2010-11-ஆம் நிதியாண்டில் அரசுவழங்கிய மானியத்தை செலவிட்ட கணக்குதொடர்பான ஆவணங்களை இன்னும் தாக்கல் செய்யவில்லை. இந்தக்குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடைபெறுகிறது. தேவைப்பாட்டால் அந்த அறக்கட்டளை மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

தன்னார்வு தொண்டு நிறுவனங்களில் முறைகேடு நடப்பதாக மத்திய அரசு கண்டறிந்து நடவடிக்கைக்கு முயன்றால், அதற்குமுரணான அறிக்கையை மாநில அரசுகள் தாக்கல் செய்கின்றன. இது போன்ற சமயங்களில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது தாமதமாகிறது.

தற்போது மானியங்கள் வழங்கும் நடை முறையில் முறைகேடுகள் நடப்பதற்கு ஏதுவாக உள்ள விஷயங்கள் குறித்து ஆராய்ந்துவருகிறோம். அவற்றை களைந்து விட்டு, மானியங்களை முறையாக செலவிடப் படுவதற்கான திட்டம் உருவாக்கப்படும்.

மானிய முறை கேடுகளில் ஈடுபடும் நிறுவனங்கள் கருப்புப்பட்டியலில் சேர்க்கப்படும் என்று அமைச்சர் தாவர் சந்த் கெலாட் தெரிவித்தார்.

Tags:

Leave a Reply