பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்) செலவினத்தை குறைக்கும்வகையில், அதன் ஊழியர்கள் ஒருலட்சம் பேருக்கு விருப்ப ஓய்வு அளிக்கும்திட்டம் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது.

இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி பி.எஸ்.என்.எல்.,லுக்கு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ரூ.1,206.65 கோடி அளவுக்கு நிலுவைக்கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அதில், ரூ.1,053.84 கோடிக்குரிய கட்டணம் தொடர்பாக தனியார் நிறுவனங்கள் சிலமுறையீடுகளை செய்துள்ளன.

நிலுவைக் கட்டணத்தை வசூலிக்க தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து வங்கி உத்தரவாதம் பெறுவது, மத்தியஸ்த முறையில் பேச்சுநடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றில் பிஎஸ்என்எல் ஈடுபட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் தரை வழி தொலைபேசி சேவையில் இருந்து செல்போன்சேவைக்கு வேகமாக மாறிவருவதால் பிஎஸ்என்எல் சேவை எண்ணிக்கை சரிவடைந்து வருகிறது. தொலைத்தொடர்பு துறையில் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்நிலையில், போட்டியை சமாளிக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதியை விரிவுபடுத்த தேவைப்படும் முதலீடுகள் பிஎஸ்என்எல் வசம் இல்லை. அதன் ஊழியர்களுக்கான செலவினம் கூடுதலாக உள்ளது.

பிஎஸ்என்எல் புனரமைப்பு நடவடிக்கையாக, அந்நிறுவனம் மத்திய அரசுக்கு அளிக்கவேண்டிய ரூ.1,411 கோடி கடன்தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல்லின் வளங்களை உரியமுறையில் பயன் படுத்தவும், அதன் ஊழியர் செலவினத்தை கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைந்த புனரமைப்புத் திட்டத்தை மத்திய அரசு வகுத்துவருகிறது. பிஎஸ்என்எல் நிர்வாகமும் தனியாக புனரமைப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, சுமார் ஒருலட்சம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டத்தை அந்நிறுவனம் தயாரித்துள்ளது. இதன்மூலம் ஊழியர்களுக்கான செலவினம் குறையும். இந்தத்திட்டம் தொடர்பான பரிந்துரைகளை மத்திய அமைச்சர்கள் குழு ஆய்வுசெய்த பிறகு, பிஎஸ்என்எல்லுக்கு தேவைப்படும் நிதியுதவியை மத்திய அரசு வழங்கும் என்றார் ரவிசங்கர் பிரசாத்.

Leave a Reply