நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்த பிரதமர் நரேந்திரமோடிக்கு அதிகாரத்தை அளிக்கும் விதமாக மாநிலங்களவையில் பா.ஜ.க.,வுக்கு பெரும்பான்மையை பெற்றுதருவதே எங்களது இலக்கு என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது , பொருளாதார வளர்ச்சிக்கு புத்துயிரூட்டும் விதமாக சிலசட்டங்களை இயற்ற மோடி அரசு விரும்புகிறது. அதில் சிலமசோதாக்கள் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டவை. இந்த சட்டங்கள் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த உதவும்.

ஆனால் முறையான காரணம் இல்லாமலும், இந்த சட்டங்களை இயற்றவிடாமலும் காலம் தாழ்த்தும் உத்திகளை காங்கிரஸ் கையாண்டு வருகிறது. காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் பரிந்துரைக்கப்பட்ட மசோதாக்களுக்கு தற்போது அவர்களே ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். காங்கிரசின் இதுபோன்ற சந்தேகத்துக்குரிய செயல்பாடுகள் ஒரே ஒருசெய்தியை மட்டும் தருகிறது. அது மாநிலங்களவையில் பெரும்பான்மையை நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெறவேண்டும் என்பதே.

அவ்வாறு பெற்றால் எதிர்க் கட்சியினரால் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான சட்டங்களை இயற்றுவதற்கு எந்தவித முட்டுக்கட்டையும் போடமுடியாது. மோடி தலைமையிலான மத்திய அரசு திறம்படசெயல்பட முடியாது என்று மக்களவையில் காங்கிரஸ் கட்சியினர் கோஷம் எழுப்புகின்றனர். மோடி தலைமையிலான அரசு செயல்படமுடியாது என்றால் யாரால் செயல்பட முடியும் என்பது புரியவில்லை என்றார்.

Tags:

Leave a Reply