மியான்மர் நாட்டில் மேற்கொண்ட 4 நாள் அரசு முறைப்பயணம் வெற்றிகரமாக அமைந்தது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

மியான்மரில் நடைபெற்ற ஆசியான்மாநாடு, ஆசியான் பிராந்திய அமைப்புக்கூட்டம் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சிமாநாடு ஆகியவற்றில் பங்கேற்று விட்டு இந்தியா திரும்புவதற்கு முன்னர் அந்நாட்டுத் தலைநகர் நேப்பிடாவில் செய்தி யாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியதாவது: மாநாட்டு நிகழ்ச்சிகள், ஆசியான் உறுப்பினர் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தைகளின் போது இந்தியாவின் நிலைப்பாடுகளை உறுதியான முறையில் எடுத்துரைத்தேன். தென் சீனக்கடல் பிராந்தியத்தில் சுமுகமான கப்பல் போக்குவரத்து நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளால் இந்த 3 அமைப்புகளின் உறுப்பு நாடுகள் மத்தியில் இந்தியா மீதானமதிப்பு உயர்ந்துள்ளது.

மோடியின் அரசு செயல்படுத்தி வரும் பொருளாதாரக் கொள்கையால் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் தொழில்தொடங்கவும், முதலீடுசெய்யவும் ஆர்வமாக இருப்பதாகவும் 3 அமைப்புகளின் உறுப்பு நாட்டுப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

மியான்மர் அதிபர் யூ தெய்ன்செய்ன், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் யூ உன்னா மாங் உடனான பேச்சுவார்த்தையின்போது, இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் பிரச்னையை ஏற்படுத்தி வரும் சில தீவிரவாத அமைப்புகள் மியான்மரை மையமாக கொண்டு இயங்குவதைச் சுட்டிக்காட்டி, இதனால் இரு நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் அந்த இயக்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன்’ என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.

Leave a Reply