மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங் ஆகியோருக்கு சிறந்த நாடாளுமன்ற வாதிகளுக்கான விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கௌரவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடு, அவையில் அவர்கள் வெளிப்படுத்திய திறன் போன்றவற்றை இந்திய நாடாளுமன்ற ஆய்வுக்குழு ஆராய்ச்சி செய்து சிறந்த நாடாளுமன்ற வாதிகளைத் தேர்வு செய்கிறது.

அதன் அடிப்படையில், 2010-ம் ஆண்டில் சிறந்த நாடாளுமன்ற வாதியாக அருண்ஜேட்லி, 2011-இல் கரண் சிங், 2012-இல் சரத் யாதவ் ஆகியோரை ஆய்வுக்குழு தேர்வு செய்தது. இதையடுத்து, தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஜி.எம்.சி. பாலயோகி அரங்கில் செவ்வாய்க் கிழமை (ஆகஸ்ட் 12) பாராட்டுவிழா நடைபெற்றது.

அதில், சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி, குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான ஹமீத் அன்சாரி, மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மூன்று தலைவர்களுக்கும் பிரணாப் முகர்ஜி விருது வழங்கிப் பாராட்டினார்.

பின்னர் அவர் விழாவில் பேசியதாவது: ஜனாதிபதியாக இருப்பதால், என்னால் அதிகமாக பேச முடிவதில்லை. அதனால், எம்.பி.யாக இருந்த வாழ்க்கையை இழந்தது ஏக்கமாக இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, பாராளு மன்றத்துக்குள் முதல் முறையாக நுழைந்த போது, பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்றத்தின் படிக் கட்டுகளை தொட்டுவணங்கினார். அதை பார்த்து நான் நெகிழ்ந்து போய்விட்டேன். பாராளுமன்றத்தின் புனிதத் தன்மையையும், கண்ணியத்தையும் அது காட்டுகிறது.

பாராளுமன்றத்தின் கண்ணியம், கவுரவம், மரியாதையை காப்பாற்றுவது எம்.பி.க்களாகிய உங்கள் பொறுப்பு. கடவுள் புண்ணியத்தில் உங்களைத்தவிர, வேறு யாரும் இதைச் செய்யமுடியாது. எனவே, நீங்கள்தான் பாராளுமன்றத்தின் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு ஜனாதிபதி பேசினார்

பின்னர் பேசிய பிரதமர்மோடி, பாராளுமன்றத்தில் தற்போது நகைச்சுவை உணர்வுக்கு பெரும்பஞ்சம் வந்துவிட்டதாகவும், நாம் ஏதாவது சொல்லப்போக ஊடகங்கள் அதைத் தவறாக சித்தரித்து விடுவார்களோ..? என எம்.பி.க்கள் பயப்படுவதாகவும் வேடிக்கையாக குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் நகைச்சுவை உணர்வோடு தொடுக்கப்பட்ட கண்டனக் கணைகளை தாக்குதலுக்கு உள்ளான சில எம்.பி.க்களும் ரசித்து, சிரித்து, மகிழ்ந்த சில நிகழ்வுகளை சுட்டிக்காட்டிப் பேசிய அவர், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மூளை எந்தவகை ‘சாப்ட்வேரால்’ செய்யப்பட்டது என்று தெரியவில்லை என்று வியந்தார்.

அவருடன் அரை மணிநேரம் பேசிக்கொண்டிருந்தால் ஒரு நல்ல புத்தகத்தை படித்த மன நிறைவு ஏற்படுகிறது என்றும் பிரதமர் புகழாரம் சூட்டினார்

Tags:

Leave a Reply