நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் 365 நாட்களும் தடையற்றமின்சாரம் வழங்குவதே மத்திய அரசின் லட்சியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்..

மராட்டிய மாநிலம் சோலாப்பூரில் நேற்று மதியம் நடைபெற்ற விழாவில் 765 கிலோவாட் சக்திகொண்ட சோலாப்பூர்–ராய்ச்சூர் மின் வழித் தடத்தையும், புனே–சோலாப்பூர் நான்கு வழிச்சாலையையும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

நாட்டில் உள்ள அனைத்து கிராமங் களுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்குவதே மத்திய அரசின் லட்சியமாகவும், கனவாகவும் உள்ளது. வருடத்தின் 365 நாட்களும், வாரத்தின் 7 நாட்களும் 24 மணிநேரமும் தடையற்ற மின்சாரம் வழங்க விரும்புகிறோம்.

மின்சாரத்தை உற்பத்திசெய்து வினியோகம் செய்வது போல், அதை சேமிப்பதும் முக்கியமானதாகும். மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் அதேவேளையில், மின் நுகர்வையும் சிக்கனப்படுத்த வேண்டும். நாட்டுக்கு சேவைசெய்ய வேண்டுமானால் எம்எல்ஏ. அல்லது எம்.பி. ஆகவேண்டும் அல்லது ராணுவத்தில் சேரவேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள். மின்சாரத்தை சேமிப்பதுகூட நாட்டுக்கு செய்யும் மிகப்பெரிய சேவை ஆகும்.

மின்சாரத்தை உற்பத்திசெய்வதற்கு அதிக செலவாகும். ஆனால் அதை சேமிப்பது எளிது. மின்சாரத்தை சிக்கனமாக பயன் படுத்தி மின் கட்டணத்தை குறைப்பது பற்றி மாணவர்களும், இளைஞர்களும் தங்கள் குடும்பத்தினருடன் ஆலோசிக்கவேண்டும். மின்சார சேமிப்பது அனைவருக்கும் உதவுவதாக அமையும். இது நமது தேசிய கடமை ஆகும்.

சாலை போக்குவரத்து எந்த அளவுக்கு முக்கியமானதோ அந்த அளவுக்கு ரெயில்பாதைகளையும் நாம் அதிகரிக்க வேண்டும். இத்தகைய அடிப்படை கட்டமைப்புகள் சிறப்பாக அமையும்போது வேலை வாய்ப்பும் பெருகும் என்று நரேந்திர மோடி கூறினார். 

Leave a Reply