நவி மும்பை நவசேவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுக பொறுப்புகழகத்தில் 277 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.4 ஆயிரம்கோடி செலவில் சிறப்புபொருளாதர மண்டலம் அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி பேசியதாவது:–

சிறப்புபொருளாதார மண்டல திட்டங்களில் உள்ள ஏராளமான தடைகள் குறித்து நாடுமுழுவதும் குரல் எழுந்து உள்ளது. இதனால் பிரச்சினைகளை ஆய்வுசெய்ய உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பிரச்சினைகளுக்கு வெகுவிரைவில் தீர்வுகிடைக்கும். பிரதமரின் அலுவலகம் சார்பில் அமைக்கப்பட்ட குழுவும் சிறப்புபொருளாதர மண்டல திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறது.

ஏற்றுமதி மேம்பாட்டில் மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்பட உள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படா விட்டால் ஏற்றுமதியில் நாம் புதியசாதனையை படைக்க முடியாது.

அதேநேரத்தில் மாநில அரசுகளும் தன்னிச்சையாக ஏற்றுமதி மேம்பாட்டில் கவனம் செலுத்தவேண்டும். ஏற்றுமதி மேம்பாட்டில் உள்ள தடைகள்குறித்து மாநில அரசுகளுடன் சமீபத்தில் மத்திய அரசு கலந்து ஆலோசித்தது. ஏற்றுமதி அபிவிருத்தி கவுன்சில்கள் அமைத்துக் கொள்வதற்காக மாநில அரசுகளுக்கு விரைவில் உரிமை வழங்கப்படும்.

இதன்மூலம் வெளிநாடுகளுடன் மாநில அரசுகள் ஏற்றுமதி வர்த்தகத்தை சுதந்திரமாக செய்துகொள்ள முடியும். அவர்கள் மத்திய அரசை முழுமையாக நம்பி இருக்கவேண்டிய அவசியம் இருக்காது.

தற்போது ஏற்றுமதியை பெருக்குவதில் மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை முக்கிய பங்காற்றிவருகிறது. மாநில அரசுகளும் ஏற்றுமதியை அதிகரிக்க போட்டியிட்டு, வெளிநாட்டுசந்தை வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.

கடற்கரை பகுதியில் உள்ள மாநிலங்களுக்காக மத்திய அரசு ‘சாகர் மாலா’ என்ற புதியதிட்டத்தை உருவாக்கி உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் துறைமுகவளர்ச்சி மட்டுமின்றி துறைமுகம் சார்ந்த வளர்ச்சிகள், சிறப்புபொருளாதார மண்டலம், ரெயில், சாலை, விமானம், கடற்கரையோர நீர் வழி போக்குவரத்து, கிடங்கிவசதி போன்றவை அடங்கும்.

மூன்றில் ஒருபங்கு உலகவர்த்தகம் இந்திய கடல்பகுதியை சார்ந்துதான் நடக்கிறது. இந்தியாவின் வளத்திற்கு துறைமுகங்கள் நுழைவுவாயிலாக உள்ளன என்று நரேந்திர மோடி பேசினார்.

Tags:

Leave a Reply