உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘ஐஎன்எஸ். கொல்கத்தா’ போர்க் கப்பலை பிரதமர் நரேந்திரமோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். இந்த போர்க் கப்பல் இந்தியாவின் ராணுவ வல்லமையை உலகிற்கு பறைசாற்றும் என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

ஐ.என்.எஸ். கொல்கத்தா போர்க்கப்பலை கடற்படையில் சேர்ப்பதற்கான விழா மும்பை கடற்படைத்தளத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் போர்க் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

நமது ராணுவவலிமை உலகிற்கு தெரியும் போது நம் மீது எதிரிநாடுகளுக்கு அச்சம் ஏற்படும். நமக்கு எதிராக ஒரு அடி கூட எடுத்து வைக்க மாட்டார்கள். உலக வர்த்தகத்தில் கடல்சார் பாதுகாப்பு முக்கியபங்கு வகிக்கிறது. அதன் அடிப்படையில் பரந்துவிரிந்த இந்திய கடல் எல்லையை பாதுகாக்கவும் வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் கடற்படை மேலும் வலுவாக்கப்படும்.

ஐ.என்.எஸ். கொல்கத்தா போர்க்கப்பல் முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது நமது தொழில்நுட்ப தன்னிறைவுக்கு எடுத்துக் காட்டாகும். இந்த போர்க் கப்பல் கடற்படையில் இணைவதன் மூலம் நமது ராணுவவலிமை உலகிற்கு பறைசாற்றப்படுகிறது. தற்போது வெளி நாடுகளில் இருந்தே ஆயுதங்களை இறக்குமதிசெய்து வருகிறோம். பாதுகாப்புத் துறையில் 49 சதவீத அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளித்திருப்பதன் மூலம் விரைவில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்படும். என்று பேசினார்.

மும்பை கப்பல் கட்டுமானத் தளத்தில் வடிவமைக்கப் பட்டுள்ள ஐஎன்எஸ். கொல்கத்தா போர்க் கப்பல் 163 மீட்டர் நீளம், 17.4 மீட்டர் அகலம், 6800 டன் எடைகொண்டதாகும்.

தரையில் இருந்து தரை இலக்கைதாக்கி அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணை, எதிரி விமானங்கள், போர்க் கப்பல்கள், நீர் மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன்கொண்ட அதிநவீன ஏவுகணைகள், மிகத் துல்லியமாகக் கண்காணிக்கும் ரேடார்கள் ஆகியவை ஐ.என்.எஸ். கொல்கத்தா போர்க்கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன. இதில் இரண்டு ஹெலிகாப்டர் தளங்களும் உள்ளன.

கொல்கத்தா நகரின் சிறப்பை விளக்கும்வகையில் கப்பலின் முகப்பில் வங்கப்புலியும் பின்பக்கத்தில் ஹவுரா பாலம் படங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply