அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டுவதே விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் முக்கிய குறிக்கோள் என்று அதன் தலைவர் பிரவீன் தொகாடியா தெரிவித்தார்.

மும்பையில் நேற்று நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி மற்றும், விசுவஹிந்து பரிஷத் அமைப்பு தொடங்கப்பட்ட பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்க ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பக்வத் வந்திருந்தார். அவர் கூறுகையில் “ஹிந்துஸ்தான் என்பது இந்துக்களின் தேசம். நமது நாட்டின் அடையாளம் ஹிந்துத்துவா.

இந்துத்துவா என்பது, பிற மதங்களையும் தன் மதத்தைப் போல் நினைத்து இணைத்துக் கொள்ளும் வாழ்வியல் வழிமுறை. ஜாதி பேதமற்று சமத்துவமாக இந்துக்கள் வாழ வழிசெய்வதே அடுத்த ஐந்தாண்டுகளில் விசுவஹிந்து பரிஷத் செய்ய வேண்டிய முக்கிய பணியாகும்.

இந்த பணியில் ஆர்எஸ்எஸ்சும் தன்னை இணைத்துக்கொள்ளும். இந்துக்கள் அனைவரும் பாகுபாடு இன்றி, ஒரே இடத்தில் நீர் அருந்தவேண்டும், ஒரே இடத்தில் வழிபாடு நடத்த வேண்டும். ஜாதிக்கொரு சுடுகாடு இருக்ககூடாது. இந்துக்களில் அவர்கள் யாராக இருந்தாலும் இறந்த பிறகு ஒரே சுடுகாட்டில் தான் தகனம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியாவிடம் அயோத்தி ராமர்கோயில் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்குமாறு நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதிலில் “அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டுவது விஹெச்பியின் குறிக்கோள். ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும் வரை எங்களது நோக்கம் இதுவாகத்தான் இருக்கும். அமைதி ஒப்பந்தத்தை மீறி, எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்களை நடத்திவருகிறது. தாவூத் இப்ராஹிம், ஹபீஸ்சையீத், மொசூத் அசார் ஆகிய தீவிரவாதிகளை இந்தியாவிடம், பாகிஸ்தான் ஒப்படைக்கும்வரை அந்த நாடு அமைதியை விரும்புவதாக எடுத்துக்கொள்ள முடியாது என்றார்

Tags:

Leave a Reply