சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை போன்று இந்தியாவிலும் ரயில்வே பல்கலைக் கழகத்தை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் சதானந்த கௌடா தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: சீனாவில் 35 ரயில்வே பல்கலைக் கழகங்கள் உள்ளன. அதேபோல பிரான்சிலும் பல ரயில்வே பல்கலைக்கழகங்கள் உள்ளன.ரயில்வேத் துறையில்பணியாற்றக் கூடிய பணியாளர்களை தயார்ப் படுத்துவதற்காக இந்தியாவிலும் ரயில்வே பல்கலைக் கழகத்தை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ரயில்வேத் துறைக்கு ஆள்சேர்க்கும் போது தகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதில் உள்ளூர் மக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது சரியாகாது. கர்நாடகத்தில் பணியாற்றும் ரயில்வேத் துறை ஊழியர்கள் கன்னடத்தை சரளமாகபேசும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக மங்களூரில் இரண்டு பயிலரங்குகள் நடந்தன. அதேபோல, அந்தந்த மாநிலங்களில் அப்பகுதி மொழிகளில் சரளமான தகவல் தொடர்புக்கு முக்கியத் துவம் அளிக்க பயிலரங்குகள் நடத்தப்படும்.

நாடெங்கும் 11,800 ஆளில்லா ரயில்வே கேட்கள் உள்ளன. இங்கெல்லாம் உள்ளூர் அரசுகளின் ஆதரவுடன் சுரங்க பாலங்கள் அல்லது மேம்பாலங்கள் கட்ட திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத்திற்கு ரூ.3600 கோடி செலவிடப்படும்.இதில் 50 சத செலவை மாநில அரசு ஏற்கவேண்டும்.

பெண்கள் பயணிக்கும் ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். மேலும் பெண் ரயில்வே பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.இதற்காக 4 ஆயிரம் காவலர்கள் புதிதாக பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றார்.

Leave a Reply