மத்திய திட்டக் கமிஷனுக்கு பதிலாக புதிய அமைப்பு தொடங்குவது தொடர்பாக பொது மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்கிறார்.

டெல்லி செங்கோட்டையில் கடந்த 15–ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றிவைத்து, சுதந்திர தின உரை ஆற்றினார்.

அப்போது அவர், ”மத்திய திட்டக்கமிஷன், அன்றைய காலகட்டத்தின் தேவைகளை சந்திக்கும்வகையில் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போது நாட்டின் நிலைமை மாறி இருக்கிறது. உலகச் சூழலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. திட்டக் கமிஷனின் வடிவமைப்பை மாற்றி அமைக்கவேண்டிய தேவை எழுந்துள்ளது. புதிய ஆன்மாவுடன் புதிய அமைப்பு தேவைப்படுகிறது. விரைவில் திட்டகமிஷனுக்கு மாற்றாக ஒரு புதிய அமைப்பு உருவாக்கப்படும்” என கூறினார

இந்நிலையில் திட்டக் கமிஷனுக்கு மாற்றாக அமையக் கூடிய அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து பொதுமக்களின் கருத்தை அறியும் விதமாக பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ” திட்டக்கமிஷனுக்கு மாற்றாக அமையக்கூடிய நிறுவனம், 21ம் நூற்றாண்டு இந்தியாவின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய ஒன்றாகவும், மாநிலங்களின் பங்களிப்பை பலப்படுத்தக் கூடியதாகவும் அமைய வேண்டும் என்று கருதுகிறோம். உங்கள் ஆலோசனைகள் வந்து குவியட்டும்” என கூறி உள்ளார்.

இது தொடர்பாக மோடியால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள ‘மை கவ் நிக் இன்’ ( mygov.nic.in) இணையதளத்திலும் நேற்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ” திட்டக்கமிஷனுக்கு மாற்றாக அமையக்கூடிய நிறுவனம் எத்தகைய வடிவமைப்பை கொண்டிருக்கவேண்டும் என்பது தொடர்பாக பொதுமக்களின் ஆலோசனைகளை பிரதமர் வரவேற்கிறார்” என கூறப்பட்டுள்ளது. எனவே இந்த இணையதளத்தில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

Tags:

Leave a Reply