ஊழல் ஒருநோய், பாவச்செயல் , இந்த நோயை நாட்டைவிட்டு விரட்டுவதில் தனது அரசு உறுதியாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரி அருகே மெளடாவில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரம் மெகாவாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் மின்நிலையத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த விழாவில் அவர் பேசியதாவது:

ஊழலானது நாட்டை அழித்து விடக் கூடியது . ஆகவே இந்த ஊழல் என்ற நோயை நாட்டைவிட்டே வெளியேற்றுவோம். எந்தநாடாக இருந்தாலும் அது முன்னேற வேண்டுமானால் நாட்டின் உள் கட்டமைப்பை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.

நம்மால் உரிய உள்கட்டமைப்பை உருவாக்கமுடியும் என்றால், நாட்டின் வளர்ச்சி அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உள்கட்டமைப்புகளிலேயே மிகவும் முக்கியமானது மின்சாரம் தான். இதன் மூலம்தான் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியும்.

நாட்டில் சூரியமின்சக்தி போன்ற மாற்று மின்னுற்பத்தியைப் பெருக்குவதே எனது அரசின் முக்கியநோக்கம். அடித்தட்டு மக்களுக்கு பொருளாதார வசதிகள் கிடைக்க வழிவகுக்கும் “”ஜன்தன்” திட்டம், வரும் 28ம் தேதி தொடங்கப்படவுள்ளது.

இந்தத் திட்டப்படி வங்கிக்கணக்கு, பற்று அட்டை (டெபிட் கார்டு), ரூ. 1 லட்சம் மதிப்பிலான காப்பீடு போன்றவை வழங்கப்படும். இதன் மூலம் அவர்கள் கடன் தொல்லைகளிருந்து விடுபட முடியும் என்று பேசினார்.

Tags:

Leave a Reply