ஒருங்கிணைந்த இலங்கை என்ற வரைய றைக்குள் தமிழர்கள் சம உரிமை, சுய மரியாதை, கண்ணியம், கௌரவத்துடன் வாழ அந்நாட்டு அரசு, அரசியல் தீர்வுகாண வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தன்னைச் சந்தித்த இலங்கைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தலைவர்களிடம் மோடி இவ்வாறு கூறியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

மூன்று நாள்கள் பயணமாக தில்லி வந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் இரா. சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை. சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், செல்வராஜா, சுமந்திரன் ஆகியோர் பிரதமர் மோடியை சனிக்கிழமை சந்தித்துப் பேசினர். பிரதமரின் முதன்மைச் செயலர் நிருபேந்திர மிஸ்ரா, இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் சுஜாதா சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தோவால் ஆகியோர் உடனிருந்தனர். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்தச் சந்திப்பு நீடித்தது. இந்தச்சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அரசியல் தீர்வு: இலங்கை தமிழர்களுக்காக இந்திய அரசு மேற்கொண்டுவரும் மறுசீரமைப்பு, நிவாரணம் போன்றபணிகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படும். குறிப்பாக, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்திய அரசு சார்பில் கட்டப்படும் வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்ந்து செயல் படுத்தப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களிடம் பிரதமர் உறுதியளித்தார்.

இலங்கையின் தற்போதைய நிலைமை, அதிகாரப்பகிர்வு குறித்த தங்களின் நிலைப்பாடு, எதிர்பார்ப்புகுறித்து பிரதமரிடம் அவர்கள் விளக்கினர். இதைக் கேட்டறிந்த பிரதமர், "ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தமிழர்கள் சம உரிமை, சுய மரியாதை, கண்ணியம், கௌரவத்துடன் வாழ அந்நாட்டு அரசு அரசியல் தீர்வுகாண வேண்டியது அவசியம்' என்றார்.

"இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13ஆவது சட்டத் திருத்தத்தின்படி, இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு இலங்கையில் உள்ள அனைத்துத் தரப்பினரும் கூட்டு உணர்வுடனும், பரஸ்பர ஏற்புடைமையுடனும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்' என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களிடம் மோடி கூறினார் என்று பிரதமர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply