வீட்டுக்கு ஒரு வங்கிக்கணக்கு இருக்கும் வகையில் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

'பிரதான் மந்திரி ஜன்தன் யோஜ்னா'என்ற பெயரிலான இந்த திட்டத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் உடனடியாக ஒருகோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப் படுகின்றன. இதற்காக நாட்டின் அனைத்து வங்கிகளும் மும்முரமாக பணியாற்றி வருகின்றன .

ஏழை மற்றும் பின்தங்கிய மக்கள், அரசு நலத் திட்டங்கள் மூலம் பயன் பெறும் வகையில், ஏழரை கோடி வங்கி கணக்குகள் தொடங்க திட்டமிடப்படும் என பிரதமர் நரேந்திரமோடி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்திருந்தார்.

இத்திட்டத்தின்படி கணக்கு தொடங்கும் வாடிக்கையாளருக்கு ஒரு வங்கிப் பற்று அட்டை (டெபிட்கார்டு), ரூ. 1 லட்சத்துக்கான காப்பீடுவசதி கிடைக்கும். திட்டம் தொடங்கப்பட்ட முதல் 100 நாள்களுக்குள் வங்கிக் கணக்கு தொடங்குவோருக்கு ரூ.2 லட்சத்துக்கான விபத்துகால காப்பீடு வழங்கப்படும்.

தலைநகரில் பிரதமர் இத்திட்டத்தைத் தொடங்கி வைப்பதைப்போல, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 76 இடங்களில் இத்திட்டத்தை மத்திய அமைச்சர்கள், அந்தந்த மாநிலங்களின் முதல்வர்கள் தொடங்கிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டேராடூன், போர்ட் பிளேர், குவாஹாத்தி, பாட்னா, முசாஃபர் நகர், விசாகப்பட்டினம், மும்பை, காந்தி நகர், சென்னை சூரத், பரூச், பிலாஸ்பூர், ராய்பூர் உள்ளிட்டவை அதில் குறிப்பிடத்தக்க நகரங்களாகும்.

தொடக்க விழா நாளில் பிரதமர் ஆற்றும் உரையை 76 நகரங்களில் காணொலிமூலம் நேரலையாக ஒளிபரப்ப மத்திய அரசு ஏற்பாடுசெய்துள்ளது.

வங்கிக் கணக்கு தொடங்கப்படுவதையொட்டி, "நோ யுவர் கஸ்டமர்' எனப்படும் வாடிக்கையாளரின் விவரங்களை வங்கிகளின் பிரதிநிதிகள் ஏற்கெனவே கணக்குத் தொடங்க ஆர்வம் உள்ளவர்களிடம் சேகரித்துள்ளனர்.

இது குறித்து அதிகார வட்டாரம் கூறுகையில், 'டெபிட் கார்டுகளில் இரண்டு வகைகளாக இருக்கும் மாஸ்டர் கார்டு மற்றும் விசாகார்டு என்பவை வெளிநாட்டு வங்கிகள் அறிமுகப்படுத்தியவை . இதுபோல், இந்தியாவிற்காக இந்த திட்டத்தில் 'ருபேகார்டை' பிரதமர் அறிமுகப்படுத்த இருக்கிறார். இதன் மூலம், செலவு செய்யப்படும் பணம் அனைத்துக்கும் ருபே கார்டு வழியாக கணக்கில் கொண்டுவரப்பட்டு கருப்பு பணத்தை ஒழிக்க வாய்ப்பாக அமையும்' என்று தெரிவித்தனர்

Leave a Reply