மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகளின் படி, மத்திய அரசு ஊழியர்கள் இனிமேல் சொத்து மற்றும் மனைவியின் நகைகள், வாகனங்கள் உள்ளிட்ட வற்றையும் கணக்கு காட்டவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பொதுவாகவே ஏதேனும் சொத்துகள் வாங்கினால், அதை அரசுக்கு தெரிவிக்கவேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

ஆனால், பெரும்பாலும் யாரும் அதனை பின்பற்றுவதில்லை. அதேபோல், மனைவி மற்றும் குடும்பத்தினர் பெயரில் வாங்கும்சொத்துகள் பற்றியோ, நகைகளையோ யாரும் கணக்கு காட்டுவதில்லை. தற்போது, மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் அரசு பொறுப்பேற்றதும், ஊழலுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளது. லோக்பால் சட்டத் திருத்தத்தின்படி புதிய விதிமுறைகளையும் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதன்படி, மத்திய அரசின் கடைநிலை ஊழியர் தொடங்கி அதிகாரிகள்வரை அனைவரும் தங்களது சொத்து கணக்கை ஆண்டுதோறும் அரசிடம் தாக்கல் செய்யவேண்டும்.

இதற்காக புதிய விண்ணப்ப படிவங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில், ஊழியர்களின் சொத்துகள் மட்டுமின்றி, தங்க, வெள்ளி நகைகள், மோட்டார் வாகனங்கள் உள்ளிட்ட அசையும்சொத்து விபரங்களையும் தாக்கல் செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு அனைத்து ஊழியர்களும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் இவற்றை தாக்கல் செய்யவேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு முதல் ஜூலை மாதத்திற்குள் அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது சொத்து விபரங்களை தாக்கல்செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் இனிமேல் தங்களிடம் உள்ள பணம், நகைகள், வங்கி கணக்கு, சொத்துகள், பங்கு விபரங்கள், தொழில் முதலீடு விபரங்கள், இன்சூரன்ஸ் பாலிசி விபரங்கள், தனிப்பட்ட கடன்விபரங்கள் ஆகியவற்றை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம், மொத்த சொத்து மதிப்பு ரூ.2 லட்சத்திற்கு மிகாமலோ அல்லது அவர்களது அடிப்படை சம்பளத்தில் நான்கு மடங்குக்கு மிகாமலோ இருந்தால் அவற்றை தாக்கல்செய்ய வேண்டியதில்லை என்ற விதி விலக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம், அனைத்து துறை அமைச்சர்களுக்கும் பிரதமர் அலுவலகம் அனுப்பிய சுற்றறிக்கையில், அதிகாரிகள் தங்களது சொத்து விபரங்களை அந்தந்த துறைகளின் இணையதளங்களில் பகிரங்கமாக வெளியிட வேண்டுமென்றும், இதற்கான நடவடிக்கைகளை அமைச்சர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது

Tags:

Leave a Reply