நம்ப முடியவில்லை. நரேந்திர மோடிதான் பேசுகிறாரா? புல்லட் ப்ரூஃப் கண்ணாடி தடுப்பை நீக்கிவிட்டதால் நமக்கு சரியாக தெரியவில்லையோ?இல்லை, இல்லை. பிரதமர் நரேந்திர மோடிதான் பேசுகிறார். இந்த நிகழ்ச்சிக்காகவே தூர்தர்ஷன் இறக்குமதி செய்த ஹைடெஃபனிஷன் நேரடி ஒளிபரப்பு கருவிகள் பொய்த்தோற்றம்

காட்டவில்லை. குண்டு துளைக்காத கண்ணாடி கவசம் இல்லை. மூன்று மாதமாக சேகரித்த தகவல்களை தொகுத்து எழுதி பலமுறை ரிகர்சல் பார்த்த ரெடிமேட் உரை இல்லை. குண்டுகளை தாங்கும் ஜாக்கெட்டுக்கு மேல் அணியப்படும் மேன்மையான இழைகளால் நெய்யப்பட்டு நேர்த்தியாக தைக்கப்பட்ட நேரு கோட் இல்லை.

பாலாடை நிறத்தில் அரைக்கை குர்தா, பளிச்சிடும் வெள்ளை சுரிதார் அணிந்து தலைப்பாகை சூடிய தோற்றத்தில் ஒரு இந்திய பிரதமர் வரலாற்று சிறப்பு மிகுந்த டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவார் என்று சில ஆண்டுகளுக்கு முன்னால் எவராவது கற்பனை செய்திருப்பார்களா?

நரேந்திர தாமோதர்தாஸ் மோடி நிச்சயம் கற்பனை செய்திருக்கிறார். கனவு கண்டிருக்கிறார். ஒருக்காலும் நடக்காது என்று சுற்றியிருப்பவர்கள் கேலி செய்திருந்தாலும் மனம் தளராமல் பொத்தி பாதுகாத்திருக்கிறார். அதனால் கனவை அவரால் நனவாக்க முடிந்தது.

'எங்கோ ஒரு கிராமத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த சிறுவன் இன்று இந்த கோட்டையில் மூவண்ண கொடியை ஏற்றி நாட்டு மக்களுடன் உரையாட முடிகிறது என்றால், அந்த பெருமை முழுக்க அதற்கான வாய்ப்பை வழங்கிய நமது அரசியல் சாசனத்தையே சாரும்' என்று கோடிட்டு காட்டினார் மோடி.

சென்ற ஆண்டு சுதந்திர தினத்தில் அவர் குஜராத் முதல்வராக புஜ் மாவட்டத்தின் லாலன் நகரில் கொடியேற்றினார். அதே நேரத்தில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங் கொடியேற்றினார். தனது பேச்சையும் மன்மோகன் பேச்சையும் நாட்டு மக்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று அப்போது மோடி சொன்னார். ஆணவம் என்று நினைத்தோம். அவரது அடுத்த உரை செங்கோட்டையில் நிகழும் என நாம் நினைக்கவில்லை. அவர் நம்பினார்.

அன்று எளிய விவசாயி போல் உடை அணிந்திருந்தவர், இன்று ஜோத்புரி சஃபா என்று குறிப்பிடப்படும் தலைப்பாகை அணிந்திருந்ததுதான் வித்தியாசம். ராஜஸ்தானின் ராஜபுத்திர மன்னர்கள் மகுடம் சூட்டும்போதும் முக்கிய நிகழ்ச்சிகளிலும் அணியும் தலைப்பாகை அது. அண்டை மாநிலமான குஜராத்துக்கும் பரிச்சயமானது.

கண்ணைப் பறிக்கும் மோடியின் தோற்றத்தையும், கைகளை உயர்த்தி ஆட்டி, குரலை ஏற்றி இறக்கி பேசுவதையும் பார்த்தபோது முதலில் மிரட்சியாக இருந்தது. என்ன இது, தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுவதாக நினைப்பா என்று என்று ஒரு அதிர்ச்சி. சில நிமிடங்களில் அந்த குழப்பம் காற்றோடு கலந்து காணாமல் போனது.

கண்ணாடி தடுப்பை மட்டும் எடுக்க சொல்லவில்லை மோடி. 120 கோடி பிரஜைகளுக்கும் அவர்களின் பிரதமருக்கும் நடுவில் இருந்த கண்ணுக்கு புலப்படாத தடுப்பையும் அகற்ற விரும்பினார் என்பது பேச்சின் ஓட்டத்தில் புரிந்தது.
அச்சிட்ட உரை இல்லாமல் ஒரு மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து பேசுவது சில தலைவர்களால் மட்டுமே சாத்தியம். அவரது உரையின் குறைகளாக காங்கிரசும் இடதுசாரி கட்சிகளும் சுட்டிக் காட்டும் எல்லாமே கூர்ந்து பார்ப்பவர்களின் பார்வையில் நிறைகளாக தெரிகின்றன.

பிளானிங் கமிஷன் ஒழிக்கப்படும் என்ற அறிவிப்பை எடுத்துக் கொள்வோம். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு என்ன செய்வது, வரும் நிதியாண்டில் என்னென்ன திட்டங்களை செயல்படுத்துவது, எந்த மாநிலம் எவ்வளவு செலவிடலாம் என்பதை வரையறுக்கும் வேலையை திட்டக் குழு செய்து வந்தது. ஆண்டுதோறும் முதல்வர்கள் டெல்லிக்கு அணிவகுத்து சென்று, திட்டக்குழுவிடம் மன்றாடி ஒதுக்கீடுகள் பெறுவது வாடிக்கையான காட்சி.

மாநிலங்களில் இருந்து மத்திய அரசு வசூலிக்கும் வரிப்பணத்தில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு எவ்வளவு கொடுக்கலாம் என்பதை இந்த கமிஷன்தான் முடிவு செய்யும். இது அநீதி என்று தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தொடர்ந்து சுட்டிக் காட்டியுள்ளன. மாநிலங்களின் எதார்த்த நிலைமைக்கும் கமிஷனின் மதிப்பீடுகளுக்கும் சம்பந்தம் இருப்பதில்லை என்றும் கூறி வந்தன.

நமக்கே அது தெரியும். ஒரு நாளைக்கு 28 ரூபாய் சம்பாதிக்க முடிந்தவன் ஏழையல்ல என்று கமிஷன் நிர்ணயம் செய்தது நினைவிருக்கிறதா? . திட்டக் குழுவின் பணிகள் காலத்துக்கு பொருத்தம் இல்லாதவை என்று மோடி கூறுகிறார். அதற்கு மாற்றாக ஒரு அமைப்பை உருவாக்க போவதாக அறிவித்துள்ளார்.

அதில் என்ன தவறு? சுதந்திரம் அடைந்தபோது நாட்டின் பொருளாதாரம் மொத்தமாக அரசை சார்ந்து இருந்தது. செயல்படுத்த வேண்டிய திட்டங்கள், தொடங்க வேண்டிய தொழில்கள், வருமானம் வேலை வாய்ப்பை பெருக்கும் வழிகள் அனைத்தையும் அரசே முடிவு செய்ய வேண்டிய கட்டாயம். இன்று நிலைமை மாறிவிட்டது. தனியார் துறை பிரமாண்டமான வளர்ச்சி அடைந்திருக்கிறது. அரசும் தனியாரும் இணைந்து செயல்படுவது உலக நியதியாக மாறியிருக்கிறது.

தொழில், வணிகம், நிதி போன்றவற்றில் அரசு தனது பங்களிப்பை குறைத்துக் கொண்டு நாட்டு நிர்வாகத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. அதிலும்கூட மாநிலங்களுக்கு அநேக பணிகளை பங்கிட்டு கொடுத்து மத்திய அரசு இன்னமும் தனது இயக்க வரம்பை சுருக்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

உண்மையில், மன்மோகன் அரசும் இதை உணர்ந்திருந்தது. அதன் கடைசி காலத்தில் மத்திய திட்டங்கள் பெரும்பாலானவற்றை மாநிலங்களுக்கு மாற்றி நிதியை கையாளும் பொறுப்பையும் ஒப்படைத்தது. அவ்வாறு படிப்படியாக செல்லாமல் ஒரே அடியில் மாற்றம் கொண்டுவர மோடி முனைகிறார்.

சுருக்கமாக சொன்னால் நாட்டு முன்னேற்றத்தில் மத்திய அரசுக்கு இணையாக – அதைவிடவும் அதிகமாக – மாநில அரசுகளுக்கு பங்களீப்பு இருப்பதை அங்கீகரித்து, அதற்கேற்ப நிதி நிர்வாகத்தில் அவற்றுக்கு சுதந்திரம் வழங்கி, மேற்பார்வை பொறுப்பை மட்டும் தன் வசம் வைத்திருக்க தனது அரசு விரும்புவதாக மோடி சுட்டிக் காட்டினார். கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படை அதுதான். எனவே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள்கூட இந்த ஏற்பாட்டை வரவேற்கும்.

உற்பத்தி துறையில் வெளிநாடுகளுக்கு முழுமையாக கதவை திறந்துவிடவும் மோடி முன்வந்திருக்கிறார். இதை இடதுசாரிகளும் இந்திய தொழிலதிபர்களும் ஏற்க மாட்டார்கள். ஆனால், நுகர்வோர் என்ற ரீதியில் பொதுமக்களுக்கு இதனால் விளையக்கூடிய பலன்களை குறைத்து மதிப்பிட முடியாது.

உற்பத்தி துறையில் வெளிநாட்டு முதலீடுகள் பெருகும்போது வேலை வாய்ப்பு கணிசமாக பெருகும். ஆண்டுக்கு ஒன்றரை கோடி இளைஞர்கள் வீதம் வேலை தேடும் வேட்டையில் சேர்கிறார்கள். அத்தனை பேருக்கும் பிழைப்புக்கு வழிகாட்ட உற்பத்தி துறை தவிர எதுவும் உதவாது.

இருபது ஆண்டுகளாக சாஃப்ட்வேர் துறையில் முதலீடு குவிந்ததால் ஐடி படித்த நமது இளைஞர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் வேலை கிடைத்தது. டெபுடேஷனில் வெளிநாடுகளுக்கு சென்று கூடுதல் வருமானமும் தொழில் அனுபவமும் பெற அது உதவியது. பொருளாதாரம் நிமிர கைகொடுத்தது.

சாஃப்ட்வேர் துறையால் பலன் அடைந்தவர்கள் லட்சங்களில் என்றால், மேனுஃபேக்சரிங் எனப்படும் ஹார்ட்வேர் துறையில் முதலீடுகள் வரும்போது வேலைவாய்ப்பு கோடிக்கணக்கில் கிடைக்கும். முதலீடு செய்யும் நாடுகள் புதிய தொழில் நுட்பத்தையும் தர கட்டுப்பாடுகளையும் கொண்டுவருவதால், இந்திய தயாரிப்பு பொருட்களின் தரம் பல மடங்கு அதிகரிக்கும்.

'குட்ஸ் ஒன்ஸ் சோல்ட் வில் நாட் பி டேக்கன் பேக்' என்ற திமிரான வாசகங்கள் பில்/ரசீதில் இடம் பெறாது. 'திருப்தி இல்லை என்றால் உடனே பணத்தை திருப்பி தருகிறோம்' என்று உத்தரவாதம் அச்சிட்டு தரும் நிலை உருவாகும். இங்கு உற்பத்தி ஆகும் பொருட்களின் தரம் உயரும்போது இறக்குமதி குறையும். அந்நிய செலாவணி மிச்சமாகும்.

வெளிநாட்டு தொழிலதிபர்கள் இந்தியன் பணத்தை சுரண்டுவார்கள் என்ற வாதம் இனி எடுபடாது. ஏனென்றால், அரசு முழு பாதுகாப்பு அளித்து கடன், நிலம், மின்சாரம், சலுகைகள் எல்லாம் கொடுத்தும்கூட இங்குள்ள தொழிலதிபர்கள் தமது பாக்கெட்டை நிரப்பிக் கொண்டார்களே தவிர பொருட்கள், சேவைகளின் தரத்தை மேம்படுத்த தவறிவிட்டார்கள். கழுத்தை பிடிக்கும் போட்டி வந்தால் தவிர நம்மவர்கள் காம்ப்ரமைஸ் செய்தே காலத்தை ஓட்டி விடுவார்கள்.

இதுவரை அரசு மட்டுமே செய்து வந்த உற்பத்தி மற்றும் சேவை தொழில்களில் பெருமளவில் தனியாரை இணைத்துக் கொள்ள இருப்பதையும் மோடி குறிப்பிட்டுள்ளார். இதுவும் போட்டிக்கு வழிவகுத்து தரம் மேம்பட உதவும் நடவடிக்கை. லாபம் மட்டுமே நோக்கமாக கொண்ட தனியார் நிறுவனங்களால் சாதாரண ஜனங்களுக்கு பலன் கிட்டாது என்பதால்தான் பொதுத்துறையில் வரிப்பணத்தை அரசு முதலீடாக கொட்டியது.

உருக்காலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், ஆயில் கம்பெனிகள், ரயில்வே, வங்கிகள் போன்றவற்றில் அரசு அக்கறையுடன் முதலீடு செய்ய இதுவே காரணம். ஆனால் காலப்போக்கில் இந்த நிறுவனங்கள் எல்லாமே அதன் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் நலன்களை காப்பதிலும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலுமே நிதியையும் நேரத்தையும் செலவிடும் நிலை உருவானது.

தனியார் நிறுவனங்களில் ஊழியர்களின் வேலை மற்றும் குறைந்தபட்ச ஊதியம்கூட உத்தரவாதம் இல்லாத சூழ்நிலையில் அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு, விலைவாசிக்கு ஏற்ப சம்பள உயர்வு, கல்வி வாகன வீட்டு கடன்கள், முழு குடும்ப மருத்துவ வசதி, தாராள விடுப்பு, விடுமுறை சுற்றுலா, போக்குவரத்து சலுகை, ஆயுட்கால ஓய்வூதியம், காப்பீடு, மரண நிவாரணம், வாரிசுக்கு வேலை என்று வசதிகள் நீடித்துக் கொண்டே போவது மிகப்பெரிய முரண்பாடு.

வேலை மற்றும் உற்பத்தி திறனுக்கும் இந்த வசதிகளுக்கும் தொடர்பு கிடையாது என்பது ஏனைய மக்களுக்கு இன்னும் கோபமூட்டும் அம்சம். இந்த முரண்பாடுகள் நிரந்தரமாக தொடர முடியாது என்பதை மோடி உணர்ந்திருப்பது ஆரோக்கியமான அறிகுறி.
பங்குச் சந்தை எப்படி பார்க்கும், தொழிலதிபர்கள் எவ்வாறு மதிப்பிடுவார்கள், பத்திரிகைகள் அந்த மாதிரி தலையங்கம் தீட்டும் என்றெல்லாம் யோசித்து எழுதப்பட்ட உரையை மோடி வாசிக்கவில்லை என்பதே பெரும் ஆறுதல். அதற்கு அப்பால் சிந்தித்து மனதில் தோன்றிய சிந்தனைகளை மக்களுடன் அவர் பகிர்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியான விஷயம்.

'டெல்லிக்கு நான் புதியவன். இங்கே வந்து சில மாதங்கள் கவனித்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒன்றல்ல, பல அரசுகள் இங்கே இயங்கி கொண்டிருப்பதாக தெரிந்தது. அரசின் ஒரு துறை இன்னொரு துறையுடன் மோதுகிறது. ஒன்று எடுக்கும் முடிவுகளை இன்னொன்று தடுக்கிறது. ஆளுக்கொரு ராஜ்யம் நடத்துகிறார்கள். தன்னை சுற்றி சுவர் எழுப்பிக் கொண்டு எவரும் தலையிடாதபடி செயல்படுகிறார்கள். அவர்களுக்குள் எந்த ஒற்றுமையும் இல்லை. பங்காளிகள் மாதிரி சண்டை போட்டுக் கொண்டு சுப்ரீம் கோர்ட் வரை வழக்கை கொண்டு போகிறார்கள். ஆனால் எல்லாம் மக்களின் பெயரை சொல்லியே நடக்கிறது. எவ்வளவு பெரிய அநியாயம் இது! ஒவ்வொரு இலாகாவும் ஒவ்வொரு திசையில் இழுத்தால் அரசு எந்த திசையில் நகர முடியும்?' என்று குமுறி இருக்கிறார் மோடி.

ஒரு பாமரனாக மட்டுமல்ல, பத்திரிகையாளனாக கேட்கும்போதும் கைதட்ட தோன்றியது. இது ஒரு பிரதமரின் குமுறல் அல்ல. கோடிக்கணக்கான சாமானிய இந்தியர்களின் ஆவேசக் கேள்வி. தெருவில் குப்பை அள்ள துப்பில்லை என்பதில் தொடங்கி, எல்லா தகுதியும் இருந்தும் எனக்கு கிடைக்காத வேலை பணம் தவிர எதுவுமில்லாத அவனுக்கு கிடைத்தது எப்படி என்பது வரை தினந்தோறும் இந்த நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் கேட்கும் ஆயிரக்கணக்கான கேள்விகளின் எதிரொலி அது.

புகழ்ச்சிகளால் இதுவரை மோடி மயங்கியதாக தெரியவில்லை. ஊழியர்களும் அதிகாரிகளும் உரிய நேரத்தில் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை உறுதி என்று வெங்கய்ய நாயுடு தொடங்கி வைத்த நல்ல விஷயத்தை மற்ற அமைச்சர்களும் இப்போது பின்பற்றுகிறார்கள். இதனால் அரசு அலுவலகங்களில் – அட்லீஸ்ட் டெல்லி தலைமை செயலகத்தில் – எல்லாரும் சரியான நேரத்தில் சீட்டில் அமர்ந்திருக்கிறார்கள். ஊடகங்கள் இதை பாராட்டி எழுதுகின்றன. ஆனால் மோடி இதனால் சந்தோஷப்படவில்லை.

'எனக்கு வேதனையாக இருக்கிறது. மனம் வலிக்கிறது. அரசு அலுவலர்கள் நேரத்துக்கு வேலைக்கு வருகிறார்கள் என்பதே இந்த நாட்டில் ஒரு செய்தியாக ஆகிறது என்றால், அரசாங்கம் இத்தனை காலம் என்ன லட்சணத்தில் நடந்து கொண்டிருந்ததை நிரூபிப்பதாக அல்லவா ஆகிறது?' என்று அவர் கொதிக்கிறார். கைகொடுங்கள், மோடி. சிட்டிசன் சியர்ஸ் யூ.

இப்படி கொதித்ததால் முன்பிருந்த ஆட்சியாளர்களை குற்றம் சொல்கிறார் என்று அர்த்தமல்ல. அந்த கட்சிகளும் பிரதமர்களும் – அவ்வளவு ஏன், எதிர்க்கட்சிகளும் – செய்த நல்ல காரியங்களால்தான் நாடு இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது என்று ஒப்புக் கொண்டு, அதற்காக நன்றியும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

காங்கிரஸ், அதன் மறைந்த மற்றும் இன்னாள் தலைவர்கள், பிராந்திய கட்சிகள் ஆகியோரை கடுமையாக விமர்சித்தவர் மோடி. இந்த உரை அவரது மாற்றத்தை காட்டுகிறது. நாட்டை முன்னேற்ற பாதையில் செலுத்த வசதியாக அரசு எந்திரம் என்ற பிரமாண்டமான சக்கரத்தை ரிப்பேர் செய்து சுழற்ற ஒவ்வொரு குடிமகனும் கட்சியும் அமைப்பும் ஒத்துழைப்பு தரவேண்டும் என வேண்டுகிறார். மதம், இனம், மொழி, ஜாதி பிரிவினைகளும் அதன் விளைவான மோதல்களும் பெரும் முட்டுக்கட்டையாக விளங்குவதை ஆதங்கத்துடன் நினைவுபடுத்துகிறார்.

வலதுசாரி, மதவாத, பழமைவாத கட்சி என்ற முத்திரையை பாரதிய ஜனதா கட்சியின் உடலில் இருந்து பிரித்தெடுக்கும் முயற்சியில் குறுகிய காலத்தில் மோடி முக்கிய கட்டங்களை தாண்டியிருக்கிறார்.

பதவி வரும்போது பணிவு வர வேண்டும், துணிவும் வர வேண்டும் தோழா… என்று எம்ஜிஆர் படப்பாடல் உண்டு. இந்தியா என்றாலே இந்துஸ்தான், இந்தியன் என்றாலே இந்துதான் என்று பகிரங்கமாக முழங்கும் வளர்ப்புத்தாய் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பிடியிலிருந்து கட்சியை விடுவிக்கும் முயற்சியையும் மோடி எடுப்பார் என்று நம்புவதற்கு அவரது சுதந்திர தின உரை இடம் அளிக்கிறது.

ஆட்சி மாற்றத்துக்கு இவர்தான் காரணம் என்று தனிநபர் எவரையும் பாராட்ட முடியாது என்று மோகன் பகவத் சொல்லியிருக்கிறார். மோடி போகும் பாதையை புரிந்து கொண்டதால் சொன்னாரா என்பது தெரியவில்லை. வேற்றுமைகள் மலிந்த நமது நாட்டில், மக்களை இனம்பிரித்து பார்க்கும் கட்சிகளுக்கு ஒருமித்த ஆதரவு ஒருக்காலும் கிடைக்காது. வரலாறு படைக்க விரும்புபவர்கள் இதை உணர்வார்கள்.

ராஜீவ் பிரதமர் ஆனபிறகு மும்பையில் காங்கிரஸ் மாநாட்டில் நிகழ்த்திய உரை அற்புதமானது. சராசரி மக்களின் குரலை அங்கே அப்பட்டமாக எதிரொலித்தார். வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களெல்லாம் 'நல்ல காலம் பிறக்கப் போகிறது' என்று ஆவலோடு காத்திருந்தார்கள். ஆனால் கட்சியில் சுற்றியிருந்த மூத்தவர்களையும், அரசில் சுற்றியிருந்த அதிகாரிகளையும் தாண்டி தனது நல்ல எண்ணங்களுக்கு ராஜீவால் செயல் வடிவம் கொடுக்க இயலாமல் போனது.
மோடி இந்த நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்த முதல் பிரதமர். குடும்பம், சுற்றம், நட்பு, அதிகாரம் போன்ற உறவுமுறைகளால் நெருங்க முடியாதபடி கோடு போட்டு வாழ்பவர். ராஜீவுக்கு இருந்த நிர்ப்பந்தங்கள் மோடிக்கு இல்லை. அவரது சுதந்திர தின உரை யாருக்கும் அறைகூவலாக இல்லை. பலவகையிலும் பிரிந்து நிற்கும் பிரஜைகளுக்கு, 'வாருங்கள், நல்ல காலத்தை உருவாக்குவோம்' என்று விடுத்த அழைப்பாக அவரது வார்த்தைகள் அணிவகுத்தன.

செங்கோட்டை உரைக்கு உயிரூட்ட மோடி மனப்பூர்வமாக முயன்றால் போதும், நாமெல்லாம் எதிர்பார்க்கும் மாற்றம் நிச்சயம் சாத்தியமாகும்.

(நன்றி இழு தள்ளு 51/ கதிர்/ குமுதம் ரிப்போர்ட்டர் 24.08.2014)

Tags:

Leave a Reply