தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்திக்கு முக்கிய இடம் உண்டு. இந்த நாளில், விநாயகப் பெருமான் வீற்றிருக்கும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்துவதுடன், விநாயகப் பெருமானின் பல்வேறு தோற்றங்கள் கொண்ட சிலைகளை அவரவர் தகுதிக்கேற்ப பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்படுகிறது.

மேலும் விநாயகருக்குப் பிடித்த அவல், பொரி, கடலை, சுண்டல், கொழுக்கட்டை, கரும்பு, சோளம் மற்றும் பழ வகைகள் வைத்து படையலிட்டு அவரது அருளை பெறுவது வழக்கம். பின்னர் அந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் நேற்று காலை முதலே கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது. அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் விநாயகரை வழிபட்டனர்.

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு விநாயகர் சதுர்த்தியை ஒட்டி 150 கிலோ எடை கொண்ட மெகா கொழுக்கட்டையை கொண்டு படையல் இட்டு நெய்வேத்தியம் செய்யப்பட்டது. பின்னர் அந்த கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

சென்னையில் பெரும்பாலான தெரு முனைகளில் பெரிய பெரிய விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

திருப்பூரில், நேற்று அதிகாலை விநாயகர் கோவில்கள் திறக்கப்பட்டு, கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனர். செரீப் காலனி சித்தி விநாயகர் கோவிலில், காலை 5.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. காலை 7.00 மணிக்கு மகா அபிஷேகம், தொடர்ந்து, தேவார இசை நிகழ்ச்சி நடந்தது. மாலையில், கோவிலில் இருந்து செரீப் காலனி, புதுத்தோட்டம், வாய்க்கால் தோட்டம், பல்லடம் ரோடு உள்ளிட்ட பகுதிகள் வழியாக, செண்டை மேளத்துடன் விநாயகர் ஊர்வலம் நடந்தது.

டவுன்ஹால் எதிரில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது; பொங்கல், கொழுக்கட்டை, புளியோதரை, சுண்டல் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. புது பஸ் ஸ்டாண்ட் அருகே, கோட்டை ஈஸ்வரன் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில், டவுன் மாரியம்மன் கோவில், லட்சுமி நகர், கணபதிபாளையம், கோபால் நகர், திருவள்ளுவர் நகர், முத்தையன் நகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கற்பக விநாயகர் கோவில், பெரியாண்டிபாளையத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், சுண்டல் வழங்கப்பட்டது. லட்சுமி நகர், பிரிட்ஜ்வே காலனி, ராஜாஜி நகர் பகுதிகளில், பெண்களுக்கான கோலப்போட்டி, சிறுவர், சிறுமியருக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தன. இந்து முன்னணி மாநில பொது செயலாளர் சுப்ரமணியம், மாநிலக்குழு உறுப்பினர் கிஷோர்குமார், மாவட்ட செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர், அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

அவிநாசி: அவிநாசி வட்டாரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள செல்வ விநாயகர் சன்னதியில், சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டன. காசி விநாயகர் கோவில், பிரசன்ன விநாயகர் கோவில், செல்வ விநாயகர் கோவில், அரச மரத்தடி விநாயகர் கோவில், தென்முக சித்தர் கணபதி கோவில் உள்ளிட்ட, சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் நேற்று சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடத்தப்பட்டன. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அவிநாசி ஒன்றிய, நகர இந்து முன்னணி சார்பில், 108 இடங்களில் 2 அடி முதல் 6 அடி வரை விநாயகர் சிலைகள், கணபதி ஹோமத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளிலுள்ள கோவில்களில், விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்து அமைப்புகள் சார்பில், முக்கிய இடங்களில், விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடும் நடத்தப்பட்டன. பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில்,முழு முதற் கடவுளான விநாயகப்பெருமானை வழிபடும் வகையில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத், உலக நலவேள்விக்குழு, பொதுமக்கள் சார்பில் என மொத்தம் 295 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடும் நடைபெற்றது. கோவில்களில் வழிபாடு:பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில், சதுர்த்தி பெருவிழாவையொட்டி, காலை 6:00 மணிக்கு மகா கணபதி ேஹாமம், 9:00 மணிக்கு பூரணாகுதி, காலை 10:00 மணிக்கு அபிேஷகம், மதியம் 12:00 மணிக்கு மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு சந்தனக்காப்பு, அலங்கார பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது.

பொள்ளாச்சி விநாயகர் கலை மன்றம் சார்பில், 54வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. விழாவையொட்டி, சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பூஜை, அர்ச்சனை, ஆராதனைகள், அன்னதான நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, 28ம் தேதி வரையும் மாலை 6:30 மணிக்கு கிருஷ்ணமூர்த்தி பாகவதர் சிஷ்யர்கள், அலமேலு, சுப்புராமன் ஆகியோரின் கிருஷ்ணகாணம் இசை சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. பணிக்கம்பட்டி கற்பக விநாயகர் கோவிலில், மூன்றாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு 18 படி அரிசியில் தயாரிக்கப்பட்ட மெகா கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோவிலில் ஆகஸ்டு 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் சதுர்த்தி விழா தொடங்கியது. இதையொட்டி தினமும் காலையில் சுவாமி வெள்ளி கேடகத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் இரவு சுவாமி சிங்க, பூத, கமல, இடப, யானை, மயில், குதிரை உள்ளிட்ட வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

6-ஆம் நாளன்று யானை முகம் கொண்ட அசுரனை வதம் செய்யும் கஜமுக சமஹாரம் நடந்தது. 9-ஆம் நாளன்று தேரோட்டம் நடந்தது. விழா நிறைவு நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கே நடை திறக்கப்பட்டது. கோவில் முன் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் 9.50 மணிக்கு கோவில் முன்பு உற்சவர் தங்ககவச அலங்காரத்திலும் சண்டிலேஸ்வரர் கோடகத்திலும் எழுந்தருளினர். பின்னர் குளப்படிக்கட்டில் அங்குசதேவர் எழுந்தருளினார். அப்போது சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முடங்க அவருக்கு பால், சந்தனம், தயிர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து தீர்த்தவாரியும் பகல் 12 மணிக்கு மூலவருக்கு கொழுக்கட்டை படைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply