தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத் தேர்தல் குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேசி வருவதாகவும், பா.ஜ.க. வேட்பாளர் தேர்வுகுறித்து ஆராய குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக உள்ளாட்சி மன்றங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு தேர்தல் ஆணையம், உள்ளாட்சிக்கு காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளோடு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேசி வருகிறது. மேலும் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் உள்ளாட்சி இடங்களுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியினை செய்து வருகிறது.

கட்சி சார்பில் போட்டியிடும் மாநகர் மன்ற உறுப்பினர், நகர்மன்ற உறுப்பினர், பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் மற்றும் ஒன்றிய பஞ்சாயத்து உறுப்பினர் ஆகியோரையும், கட்சியின் ஆதரவோடு போட்டியிடும் பஞ்சாயத்து தலைவர் மற்றும் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ஆகிய இடங்களுக்கான வேட்பாளர்களையும் சம்பந்தப்பட்ட மாவட்ட மையக்குழு பட்டியல் தயாரித்து மாநிலத்திற்கு அனுப்புவார்கள்.

மாநகராட்சி மேயர் மற்றும் நகர் மன்ற தலைவர் ஆகிய இடங்களுக்கான வேட்பாளர்கள் குறித்து கருத்து அறிந்திட இரண்டு குழுக்கள் அமைக்கப்படுகிறது. கே.என்.லட்சுமணன், சரவணபெருமாள், வைரவேலு ஆகிய 3 பேர் குழு கோவை மாநகராட்சி மேயர் மற்றும் குன்னூர், விருத்தாசலம், அரக்கோணம் ஆகிய நகர் மன்ற தலைவர் வேட்பாளர் குறித்தும், சுப.நாகராஜன், திருமலைசாமி, எஸ்.சுரேந்திரன் ஆகிய குழு நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் மற்றும் கொடைக்கானல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் வேட்பாளர் குறித்தும் கருத்துக்களை கேட்டு அறிவார்கள்.

அனைத்து இடங்களுக்கும் கருத்து கேட்டு, இதில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் இடங்கள் முடிவு செய்யப்பட்டு, பின்னர் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply