ஆர்எஸ்எஸ் பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

கேரள மாநிலம் கண்ணனூர் மாவட்டம் கதிரூர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது 27). ஆர்.எஸ்.எஸ். இயக்க தொண்டர். இவர் நேற்று வேலை விசயமாக வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது சாலையில் அவரை வழிமறித்த ஒரு கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயமடைந்த மனோஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைக் கண்டித்து கேரளா முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழுஅடைப்பு போராட்டம் நடத்த ஆர்எஸ்எஸ் அழைப்பு விடுத்தது. அதன்படி கேரள மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் ஓடவில்லை. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. ஆட்டோ, டாக்சிகள் எதுவும் ஓடவில்லை. இதனால் நகர வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

முதல்வர் உம்மன் சாண்டி பாலக்காட்டில் பல்வேறு விழாக்களில் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.தமிழகத்தில் கோவை, பொள்ளாச்சி, உடுமலை, ஊட்டி, கூடலூர் பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு இன்று பஸ்கள் செல்லவில்லை. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.கேரளாவில் இருந்து களியக்காவிளை வழியாக குமரி மாவட்டத்திற்கு இயக்கப்படும் கேரள அரசு பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. களியக்காவிளை வழியாக கேரளாவுக்கு செல்லும் தமிழக அரசு பஸ்கள் தமிழக எல்லையான களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டன.

Tags:

Leave a Reply