பட்டுக்கோட்டையில் பாஜக நிர்வாகி வீட்டில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை ரோட்டில் உள்ள காலனியில் வசிப்பவர் வக்கீல் முரளி கணேஷ் (42). பாரதிய ஜனதா மாநில வக்கீல் அணி துணைத் தலைவர். இவரது வீடு முதல் தளத்தில்

உள்ளது. தரைத் தளத்தில் உள்ள போர்டிகோவில் இவரது கார் நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை 2.50 மணிக்கு கார் மீது சரமாரியாக கல்வீசப்பட்டது. இதில் காரின் கண்ணாடி உடைந்து சிதறியது. இதை தொடர்ந்து கார் மீது பெட்ரோல்குண்டு வீசப்பட்டது. இதில் 2 பாட்டில்கள் உடைந்து தீப்பற்றியது. 3வது பாட்டில் உடையாமல் கார் மீது கிடந்தது. பாட்டில் உடைந்து எரிய தொடங்கியதும், காலனியில் உள்ள மக்கள் விழித்து கூச்சல்போட்டனர். அப்போது சில மர்ம ஆசாமிகள் அங்கிருந்து பைக்கில் தப்பி உள்ளனர்.

சம்பவம் தொடர்பாக முரளிகணேஷ் அளித்த புகாரின் பேரில், பட்டுக்கோட்டை டிஎஸ்.பி செல்லபாண்டியன், இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் அங்குசென்று விசாரித்தனர். அங்கு கிடந்த பெட்ரோல் குண்டு உள்ளிட்ட தடயங்ளை சேகரித்தனர். முரளி கணேஷ் கூறுகையில், 'என்னை குறிவைத்துதான் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். அக்கம் பக்கத்தினர் விழித்துகொண்டு சத்தம் போட்டதால், மர்ம ஆசாமிகள் தப்பி உள்ளனர். தமிழகத்தில் பா.ஜ பிரமுகர்களை குறித்து வைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. அவர்கள் யார் என்பதை அரசு கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பா.ஜ. நிர்வாகிகளுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் என்றார்

Tags:

Leave a Reply