மோடி நல்லாட்சி, நகராட்சியில் என்ற முழக்கத்துடன் மக்களை சந்தித்து வாக்குசேகரிப்போம் என மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை எதிர்த்து பாஜக போட்டியிடுகிறது. பா.ஜ.க. போட்டியிடும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் வெளியிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேள்வி:- தமிழக உள்ளாட்சிதேர்தலில் பிரதான கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில் தமிழக பா.ஜனதா களம் இறங்கி உள்ளதே?

பதில்:- பலரும் தேர்தலுக்கான கால அவகாசம் இல்லை என்று கூறி தேர்தலில் போட்டியிடு வதில்லை என்று முடிவுசெய்து இருக்கிறார்கள். தேர்தலில் போட்டியிடுவது ஜனநாயக கடமை என்ற அடிப்படையில் நாங்கள் போட்டியிடுகிறோம்.

கேள்வி:- பலம்வாய்ந்த அ.தி.மு.க.வுடன் போட்டியிடுகிறீர்களே?

பதில்:- நாங்கள் ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுக.வை எதிர்த்து போட்டியிட்டு இருக்கிறோம். நாங்களும் முழுபலத்துடன் தான் களம் காண்கிறோம். எங்களுக்கு எங்கள் கூட்டணி கட்சிகளான தேமுதிக., மதிமுக., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை ஆதரவு கொடுத்துள்ளன. இதுதவிர மாற்று கட்சிகளை சேர்ந்தவர்களும் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறோம். தமிழகத்தில் 1967-க்கு பிறகு தேசியகட்சிகள் தேய்ந்து போய்விட்டது. அதை மீட்டெடுக்கும் வகையில் எங்கள் தேர்தல்களம் அமையும்.

கேள்வி:- பாமக. உங்கள் கூட்டணியில் இருக்கிறதா? இல்லையா?

பதில்:- அவர்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். நாங்களும் தொடர்பில் இருக்கிறோம். ஆகவே கூட்டணியில் அவர்கள் இருக்கிறார்களா? இல்லையா? என்ற சந்தேகம் உங்களுக்கு வேண்டாம்.

கேள்வி:- உங்களுடைய தேர்தல் பிரச்சாரம் எதை முன்வைத்து இருக்கும்?

பதில்:- நரேந்திர மோடியின் நல்லாட்சியில் நகராட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திப்போம். மத்தியஅரசின் 100 நாள் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. ஆகவே இதை மக்களிடத்தில் எடுத்துசெல்வோம்.

கேள்வி:- பாஜக. வேட்பாளர்களை ஆதரித்து மேலிட தலைவர்கள் வருவார்களா?

பதில்:- இதுகுறித்து மத்திய தலைமையிடம் கூறியிருக்கிறோம். கண்டிப்பாக வருவார்கள்.

கேள்வி:- பா.ஜ.க.விற்கு வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது? திமுக., காங்கிரஸ் கட்சி வாக்குகள் பாரதீய ஜனதாவுக்கு கிடைக்குமா?

பதில்:- நன்றாக இருக்கிறது. பலம்வாய்ந்த போட்டியாக இருக்கும். தி.மு.க., காங்கிரஸ் கட்சி எங்களுக்கு வாக்களித்தால் கூட நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.

கேள்வி:- அ.தி.மு.க.வுடான பா.ஜ.க. உறவு எப்படி இருக்கிறது?

பதில்:- பிரதமரும், மாநில முதலமைச்சரும் இணக்கமாக இருப்பதில் என்ன தவறு. மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக இருந்தால் தானே ஜனநாயகம் தளைக்கும். அவர்களுக்கு என்ன உதவிகள் தேவையோ அதை நாங்கள் செய்கிறோம். அரசியல் வேறு. இது வேறு.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Leave a Reply