கேரளாவில் நடந்த விநாயகர் ஜெயந்தி விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்தது பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக திமுக. உள்பட பல்வேறு அமைப்பினர் உண்மைக்கு புறம்பாக பிரச்சனையை கிளப்பினர்..

இந்தநிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

குமரி மாவட்டத்தில் தற்போது ஒருபுதிய பிரச்சினையை சிலர் உள்நோக்கத்துடன் உருவாக்கி வருகிறார்கள். கடந்த 31–ந்தேதி திருவனந்த புரத்தில் விநாயகர் ஜெயந்திவிழா நடந்தபோது நான் பேசியதை குமரிமாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்ததை நான் விரும்பாதது போன்ற தோற்றத்தை அவர்கள் உருவாக்கி வருகிறார்கள்.

அந்த நிகழ்ச்சியில் பேசும் போது விநாயகர் சதுர்த்தி விழாவை இந்து குடும்பங்கள் கடைபிடித்து வந்தன. 1893–ம் ஆண்டு நாடு அடிமைப்பட்டு இருந்தபோது காங்கிரஸ் தலைவர் பாலகங்காதர திலகர் நாட்டுமக்களை சுதந்திர போராட்டத்தில் ஈடுபடவைப்பதற்காக 85 சதவீத இந்துக்களையும் ஒற்றுமைப்படுத்தி விட்டால் சுதந்திர போராட்டம் இலகுவாக அமையும் என கருதி விநாயகர்சதுர்த்தி விழாவை பொதுவிழாவாக கொண்டாட வேண்டும் என கூறினார்.

இதில் என்னுடைய கருத்தாக 85சதவீத இந்துக்களும் 15 சதவீத சிறுபான்மை மக்களும் ஒன்று சேரவேண்டும் என்று கூறினேன். அவ்வாறு அவர்கள் ஒன்றுசேர்ந்து 100 சதவீதம் ஒற்றுமையாக இருந்தால் சாதி, மொழி, மத ரீதியாக எந்த பாகுபாடும் ஏற்படவாய்ப்பு இருக்காது.

அந்த காலத்தில் சாதிமொழி ரீதியாக பாகுபாடு இருந்தது. அதனால்தான் பாகிஸ்தான் நம்மை விட்டுபிரிந்தது. திருப்பதி தமிழகத்துடன் இருக்கவேண்டும் என பலர் விரும்பினார்கள். அதுவும் நம்மை விட்டு பிரிந்தது.

தாய் தமிழகத்தோடு குமரி மாவட்டம் இணைந்ததை நான் வரவேற்கிறேன். மொழிப் போர் தியாகிகளை பாரதீய ஜனதா கவுரவப்படுத்தி வருகிறது.

நேசமணி, சிதம்பர நாடார், குஞ்சன் நாடார் போன்ற தலைவர்கள் குமரிமாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைய நடந்த போராட்டத்தில் அடிபட்டு படுகாயம் அடைந்ததை சிறுவயதில் நேரில் பார்த்துள்ளேன்.

நான் திருவனந்த புரத்தில் பேசியபேச்சின் ஒருபகுதியை மட்டும் எடுத்துகொண்டு என்னுடைய கருத்தை தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.

குமரிமாவட்டத்தில் சாய் சப் சென்டர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.தமிழக மீனவர் பிரச்சினையை பொறுத்தவரை அதற்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மோடியும் அதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறார்.

தமிழகத்தில் கனரக தொழிற்சாலைகளை மேம்படுத்த முயற்சி செய்து வருகிறேன். முதல் கட்டமாக பெல் நிறுவனத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட்டு வருகிறது. ஊட்டியில் உள்ள ஆசியாவிலேயே மிகப் பெரிய தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்ப்பதுகுறித்தும் தமிழக முதல்– அமைச்சருடன் பேசி உள்ளேன்.

தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றிபெறும். பாரதீய ஜனதா கட்சியின் 100 நாள் ஆட்சியை உலக நாடுகளே பிரமிப்புடன் பார்க்கிறது. குறுகிய நாட்களில் ஒருநாடு இந்த அளவுக்கு வளர்ச்சிபெறுவதை பிற நாடுகள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

பிரதமர் மோடி பூடான், நேபாளம் நாடுகளுக்கு சென்றபோது அங்குள்ள மக்களுக்கும் உதவிகள் செய்துள்ளார். ஜப்பான் நாட்டுக்கும் சென்று பல்வேறு ஒப்பந்தங்களை பெற்றுவந்துள்ளார்.

இந்திய ராணுவமும் தன்னிறைவு பெற்றுவருகிறது. 400 ஹெலிகாப்டர்களை இந்தியாவே தயாரிக்கும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்தியாவில் சீனபொருட்கள் விற்பனையை முழுமையாக தடுப்பது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும என்று அவர் கூறினார்

Tags:

Leave a Reply