ஆசிரியர் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை டெல்லியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலின்போது மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

அதில் ஒரு மாணவன், நான் பிரதமராக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் என நரேந்திர மோடியை பார்த்து கேட்டான்.

இதைக்கேட்டு உடனே சிரித்த அவர், நீங்கள் 2024ஆம் ஆண்டு தேர்தலுக்கு தயாராக வேண்டும். உங்களுடைய பதவிப்பிரமாணம் நிகழ்ச்சியில் நான் நிச்சயமாக கலந்துகொள்வேன் என்று நம்புகிறேன். இதை சொல்வது மூலமாக இன்னும் 10 வருடத்திற்கு என் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை (சிரித்தப்படியே) என்றும் நான் சொல்லிவிடுகிறேன் என்றார். நரேந்திர மோடியின் இந்த பதிலை கேட்டு அனைவரும் ரசித்து சிரித்தனர்.

உங்கள் குழந்தைப்பருவத்தில் ஏதாவது குறும்பு செய்திருக்கிறீர்களா? என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது குழந்தைப்பருவத்துக்கே மீண்டும் சென்ற குதூகலத்துடன் மோடி பதில் அளித்தார். எந்தக் குழந்தையாவது குறும்பு செய்யாமல் இருந்து இருக்குமா? குழந்தைப் பருவ அனுபவங்கள், ஒவ்வொரு குழந்தையின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் முக்கியம் அல்லவா? நானும் குழந்தைப்பருவத்தில் குறும்புகள் செய்திருக்கிறேன். அது என்ன தெரியுமா? நானும், எனது நண்பர்களும் திருமண ஊர்வலங்களுக்கு செல்வோம். அப்போது புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகளை இசைப்பவர்களை தொந்தரவு செய்வோம். இசைக்கலைஞர்கள் எங்களை விரட்டி விடுவார்கள். இது ரொம்பவும் வேடிக்கையாக இருக்கும்.

இதேபோன்று மணவிழாவுக்கு வந்திருக்கிற பெண்களின் புடவையை மிகவும் ரகசியமாக அருகில் உள்ளவர்களின் உடைகளுடன் முடிச்சு போட்டு விடுவேன். அவர்கள் அங்கிருந்து எழுந்து போக முயற்சிக்கிறபோது, தங்களது புடவை பக்கத்தில் உள்ளவர் உடையுடன் முடிச்சு போடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைவார்கள். யார் இதைச்செய்தது என திகைப்பார்கள். இதை அப்போது பார்க்க மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஆனால் நீங்கள் இப்படிப்பட்ட குறும்புகளில் ஈடுபடக்கூடாது என வாக்குறுதி கொடுங்கள். என்று கூறினார்

இன்னொரு மாணவி ஒருவர் எழுந்து, நீங்கள் ஒரு தலைமை ஆசிரியர் மாதிரி கண்டிப்பாக இருப்பீர்கள் என்று சொல்கிறார்களே. ஆனால் உங்களை பார்த்தால், பேசுவதை கேட்டால் அதுபோல் தெரியவில்லையே என்றார்.

அதற்கு பதில் அளித்த மோடி, நான் தலைமை ஆசிரியர் இல்லை. வேலையை செய்து முடிப்பவன். வேலையை அடுத்தவர்களிடம் இருந்து வாங்கத் தெரியும். அடுத்தவர்களை கடினமாக உழைக்க வைப்பேன். அதேநேரத்தில் நான் உழைக்காமல் இருக்க மாட்டேன். நானும் உழைப்பேன் என்றார்.

குஜராத்தில் இருந்து டெல்லிக்கு குடிபெயர்ந்துள்ளீர்கள். இந்த குடிபெயர்ப்பு எப்படி இருக்கிறது என்ற மாணவன் ஒருவனின் கேள்விக்கு, டெல்லி வந்திருக்கிறேன் என்றுதான் பெயர். ஆனால் நான் டெல்லியை இன்னும் சுற்றிப் பார்க்கக்கூட இல்லை. அலுவலத்தில் இருந்து வீட்டுக்கு செல்கிறேன். வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு செல்கிறேன். அவ்வளவு வேகமாக இருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால், பிரதமரான பிறகு வேலைகளை கவனிப்பதற்காக காலையில் சீக்கிரமாக எழந்திருக்கிறேன் என்றார்.

மேலும் பேசிய மோடி, மாணவர்கள் நிறையே படிக்க வேண்டும். எதுவெல்லாம் சுவாரஸ்யமாக இருக்கிறதோ அதையெல்லாம் படியுங்கள். கடையில் பக்கோடா வாங்கினால், அதனை ஒரு பேப்பரில் வைத்து மடித்து கொடுப்பார்கள். பக்கோடாவை சாப்பிட்டுக்கொண்டே அந்த பேப்பரில் என்ன இருக்கிறது என்று சிலர் படிப்பார்கள். அதை பார்க்கும்போது நான் ரொம்பவும் பிரமிப்படைவேன். எதுவெல்லாம் பிடித்திருக்கிறதோ அதை படியுங்கள். முக்கியமான நபர்களின் சுயசரிதையை படியுங்கள். அதில் இருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். மாணவ, மாணவிகள் விளையாட்டில் ஈடுபட வேண்டும். நன்கு வியர்வை வரும் வரை விளையாட வேண்டும். நான் பள்ளியில் படிக்கும்போது ஸ்கூல் லீடர்கூட ஆனதில்லை. நான் பிரதமராவேன் என்று நினைத்தது கூட கிடையாது. உலகத்தில் முக்கியமான நபராக ஆவேன் என்று நான் நினைத்ததுக் கூட இல்லை என்றார்

Leave a Reply