எதிர்காலத்தில் தமிழக அரசியலில் நிலவும் வெற்றிடத்தை பாஜக நிரப்பும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

தமிழகத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில், திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளே ஒதுங்கி நிற்கும் நிலையில், ஆளும் அதிமுகவை எதிர்த்து நேரடியாக களத்தில் இறங்கியிருக்கிறது பாஜக.

புதுக்கோட்டை உட்பட சில இடங்களில் பாஜகவினரை வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் அதிமுகவினர் தடுத்துவிட்டதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், 'தி இந்து'வுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டி:

வேட்புமனு தாக்கலின்போது நடந்த சம்பவங்களைப் பற்றி..?

பாஜகவைப் பார்த்து அதிமுக அரசு அஞ்சுகிறது. ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள்தான் இப்படி செய்வார்கள். சிறு விஷயங்களுக்காககூட எங்கள் கட்சியினரின் வேட்பு மனுக்கள் திட்டமிட்டு ரத்து செய்யப்பட்டன. மயிலம், வானூர் ஆகிய இடங்களில் மனுவை பார்க்காமலேயே அதிகாரிகள் வாங்க மறுத்து விட்டனர்.

சிவகங்கையில் ஒரு வேட்பாளர் தண்ணீர் வரி செலுத்தவில்லை என்று மனுவை தள்ளுபடி செய்துள்ளனர். ஆனால், அவர் முறையாக வரி செலுத்தியிருக்கிறார். இதை நாங்கள் விடமாட்டோம். தேர்தல் கமிஷனில் முறையிட்டுள்ளோம். மறு தேர்தல் நடத்தக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்.

உள்ளாட்சித் தேர்தலில் மாநில அரசின் பலத்தை மீறி பாஜக வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?

ஏன் முடியாது? எங்கள் தொண்டர் கள் உத்வேகம் பெற்றிருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கலின்போதே இது தெரி கிறது. பல இடங்களில் அரசின் அராஜகத்துக்கு எதிராகப் போராடி

போலீஸாரால் தாக்கப்பட்டுள்ளனர். பலர் சிறை சென்றுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் 'மோடியின் நல்லாட்சி தமிழகத்தின் நகராட்சிகளில்' என்ற கோஷத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்வோம். கணிசமான பகுதிகளில் வெற்றியும் பெறுவோம்.

தமிழகத்தில் அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்வதால் மத்திய அரசின் நல்ல திட்டங்களை இங்கு கொண்டுவர முடியுமா?

கட்சி அரசியல் என்பது வேறு. அரசுத் திட்டங்கள் என்பது வேறு. அதிமுக அரசின் 'அம்மா உணவகம்', 'அம்மா மருந்தகம்'ஆகிய திட்டங்களை பாராட்டியிருக்கிறேன். அதே நேரத்தில் டாஸ்மாக், மணல் கொள்ளை ஆகியவற்றை கடுமையாக எதிர்க்கிறோம். அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்வதால் தமிழகத்துக்கு மத்திய அரசின் திட்டங்களை கொண்டு வரமுடியாது என்பது தவறு.

வருங்காலத்தில் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளைத் தவிர்த்து அரசியல் வெற்றிடம் ஏற்படும் என்று உணர்கிறீர்களா? பாஜக அதை எப்படி பயன்படுத்திக்கொள்ளும்?

கண்டிப்பாக விரைவில் இங்கு ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்படும் என்பதை நாங்களும் அறிந்தே இருக்கிறோம். அதற்காக இப்போதிருந்தே தீவிரமாக திட்டமிட்டு உழைத்துக் கொண்டிருக்கிறோம். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பாஜக மட்டுமே தமிழகத்தில் நல்லாட்சி தர முடியும். 1967-க்கு முந்தைய வரலாறு விரைவில் திரும்பும். அதற்காக காங்கிரஸ் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். அப்போது திராவிடக் கட்சியினரு டன் சேர்ந்து காங்கிரஸ் தொண்டர் களும் பாஜகவுக்கு ஓட்டு போடுவார்கள்.

எதிர்காலத்தில் நடிகர் ரஜினியை பயன்படுத்திக்கொள்ளும் திட்டம் இருக்கிறதா?

ரஜினி தேசிய சிந்தனை கொண்டவர். அவர் அரசியலுக்கு வந்தால் நல்லது. பாஜகவுக்கு வந்தால் கட்டாயம் வரவேற்போம். அவர் மட்டுமல்ல, அனைத்து துறையினரும் பாஜகவுக்கு வர வேண்டும்.

கன்னியாகுமரியை கேரளாவுடன் இணைக்க வேண்டும் என்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் பேச்சு குறித்து?

அவர் பேசியது திரித்து அல்லது ஒருபகுதி மட்டும் வெளியாகி யிருக்கிறது. தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் அவர் பேசினார். அதை மாற்றி வெளியிட்டு விட்டார்கள்.

இவ்வாறு தமிழிசை சவுந்திரராஜன் கூறினார்.

நன்றி ; தி இந்து

Tags:

Leave a Reply