தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கம் என்று அழைக்கப்படும், 'சார்க்' அமைப்பு புனரமைக்கப் பட வேண்டும் என்பதில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உறுதியுடன் உள்ளது,'' என்று , மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

'சார்க்' உள்துறை அமைச்சர்களின் மாநாடு, நேபாளதலைநகர் காத்மாண்டில் இன்று நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க காத்மாண்டுசெல்லும் முன், டில்லியில் நேற்று நிருபர்களிடம்பேசிய ராஜ்நாத் சிங் கூறியதாவது:தெற்காசிய மக்களின் நலனை மேம்படுத்துவது மற்றும் உறுப்பினர் நாடுகளை கூட்டாக தன்னிறைவு பெறச்செய்வது போன்றவற்றில், சார்க் அமைப்பு அதிக அக்கறைகாட்டி வருகிறது.

நான் பங்கேற்க உள்ள, சார்க்நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில், பிராந்தியபாதுகாப்பு மற்றும் வளர்ச்சி, எல்லை தாண்டிய பயங்கரவாதம், சிலநாடுகளில் செயல்படும் பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்புகளை ஒழிப்பது உட்பட, பலமுக்கியமான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

சார்க் அமைப்பில் இடம்பெற்று உள்ள நாடுகளின் தலைவர்கள் அனைவரையும், பிரதமர் நரேந்திரமோடி, தன் பதவியேற்பு விழாவிற்கு அழைத்திருந்தார். இதன் மூலம், சார்க்நாடுகள் மற்றும் அண்டை நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்த, தற்போதைய மத்திய அரசு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேலும், பிராந்திய அளவிலான ஒத்துழைப்பு, துடிப்போடு இருக்க சார்க் அமைப்பு புனரமைக்கப்படவேண்டும் என்பதிலும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உறுதியுடன் உள்ளது. எனவே, அது குறித்து ஆலோசனைகளும் மாநாட்டில் இடம்பெறலாம்.இவ்வாறு, ராஜ்நாத்சிங் கூறினார்.

Leave a Reply