தூத்துக்குடியில் வாக்குச் சாவடியை பார்வையிடச் சென்ற பாஜ வேட்பாளர் மற்றும் அவர் கணவரை அதிமுகவினர் தாக்கினர். மயங்கி விழுந்த பாஜ வேட்பாளர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 250 வாக்குச்சாவடிகளில் மேயர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை முதல் விறுவிறுப்பாக நடந்தது. காலையில்

இருந்தே அதிமுகவினர் வாக்குச்சாவடிகளுக்குள்ளும், வெளியிலும் அத்துமீறி நடந்து கொள்வதாக பாஜவினர் புகார் தெரிவித்தனர். கிருஷ்ணராஜபுரம் 8வது தெருவில் உள்ள ஒரு பூத் அருகே மதுரை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் மதுரைவீரனின் கார் நிறுத்தப்பட்டு, அதனருகே இருந்த சிலர் அதிமுகவிற்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.

இதற்கு பாஜவினர் எதிர்ப்பு தெரிவித்ததும் அதிமுகவினர் தங்களது காரை அங்கிருந்து எடுத்துசென்று 2வது தெருபகுதியில் நிறுத்தி பெட்ஷீட்டால் மூடி மறைத்துவைத்தனர். நேற்று மதியம் முத்துகிருஷ்ணாபுரத்தில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் கள்ள ஓட்டுகள் போடுவதாக தகவலறிந்த பாஜக வேட்பாளர் ஜெயலெட்சுமியும், அவரது கணவரான தென்மண்டல செயற்குழு உறுப்பினர் கனகராஜும் அங்கு சென்றனர். அப்போது பூத்திற்குள் இருந்த அதிமுகவினர் அவர்களை தாக்கியுள்ளனர். இதில் கனகராஜூக்கு கையில் அடி விழுந்தது. இதனையடுத்து தங்களை தாக்கிய அதிமுக நகரசெயலாளர் ஏசாதுரை தலைமையிலான அதிமுக.,வினரை கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தி ஜெயலட்சுமி,

அவரது கணவர் மற்றும் பாஜவினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர். வேட்பாளர் ஜெயலெட்சுமி தன்னை அதிமுக.,வினர் தாக்கிகொல்ல முயற்சிசெய்ததாக தெரிவித்தார். தன்னை தாக்கிய அதிமுக.,வினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிய அவர் 4 மணியளவில் மறியலில் இருந்தபோதே மயங்கி விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 108 ஆம்புலன்சுக்கு போன்செய்து வெகு நேரமாகியும் வராததால் தொடர்ந்து மயங்கிய நிலையில் இருந்த ஜெயலெட்சுமியை அவரது கணவர் கனகராஜே தோளில் தூக்கிச்சென்று கார் மூலம் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவங்களினால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply