சீன அதிபர் ஜின் பிங் அந்த நாட்டு ராணுவத்தின் தலைமை தளபதியாகவும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் இருந்துவருகிறார். மேலும் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளராகவும் அவர் பதவி வகிக்கிறார்.

இந்தியாவின் ஒருங் கிணைந்த பகுதியான அருணாசல பிரதேசத்தை தேவை இல்லாமல் சீனா சொந்தம்கொண்டாடி வருகிறது. மேலும் சீன ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லை பகுதிக்குள் ஊடுருவி நெருக்கடியை உருவாக்குகிறது.

இந்நிலையில், 3 நாள் சுற்றுப் பயணமாக சமீபத்தில் இந்தியா வந்திருந்த ஜின் பிங், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, எல்லையில் நடைபெறும் அத்து மீறல்கள் குறித்து ஜின் பிங்கிடம் தனது கவலையை தெரிவித்த நரேந்திரமோடி, இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று வர்ப்புருத்தினார்.

அதற்கு, எல்லை பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாண்பதில் சீனா உறுதியாக இருப்பதாக ஜின் பிங் கூறினார்.

ஜின்பிங் இந்தியா வந்திருந்தபோதும், காஷ்மீர் மாநிலம் லடாக்பகுதியில் சீன ராணுவத்தின் ஊடுருவல் இருந்தது. சீன அதிபர் இந்தியா வந்திருக்கும் நிலையில், அந்நாட்டின் ராணுவம் ஊடுருவியது சில சந்தேகங்களை எழுப்பியது. அதிபர் மாளிகை அனுமதி இல்லாமல், ராணுவத்தில் உள்ள உயர் அதிகாரிகளே இத்தகைய நடவடிக் கைகளுக்கு காரணமாக இருக்கிறார்களா? என்ற சந்தேகமும் எழுந்தது.

இந்த சூழ்நிலையில், அதிபர் ஜின் பிங் ராணுவ தளபதிகள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் கூட்டத்தை நேற்று முன் தினம் கூட்டி முக்கிய ஆலோசனைகளை நடத்தினார். அந்த கூட்டத்தில், கட்டளை பிறப்பிப்பது தொடர்பாக ராணுவத்தில் இருக்கும் பல்வேறு அதிகாரமட்டங்கள் குறித்து கவலை தெரிவித்த ஜின் பிங், புதிய சூழ்நிலைக்கு ஏற்ப இதை ஒழுங்குபடுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து, சீன ராணுவத்தில் உயர் அதிகாரிகள் மட்டத்தில், அதிபர் ஜின்பிங் சில அதிரடி மாற்றங்களை செய்து இருப்பதாகவும், அவருக்கு நெருக்கமான 3 ராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு இருப்பதாகவும் கருதப்படுகிறது. மத்திய ராணுவ ஆணையத்திலும் அவர் மாற்றங்களை செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:

Leave a Reply