மக்களின் எதிர்பார்ப்புகளை எனது அரசு நிறை வேற்றும், உங்களை நான் கைவிட மாட்டேன் என்று நியூயார்க் நகரில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். நியூயார்க்கில், அமெரிக்கவாழ் இந்தியர் சங்கங்கள் கூட்டாக அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

வழக்கம் போல, குர்தா, பைஜாமாவும், காவிநிற கோட்டும் அவர் அணிந்திருந்தார். அவர் உள்ளே நுழைந்தவுடன், 'மோடி மோடி' என்ற குரல் அரங்கம் முழுவதும் எதிரொலித்தது. இந்திய, அமெரிக்கதேசிய கீதங்கள் இசைக்கப்பட்ட போது, மோடி எழுந்து நின்றார்.

நரேந்திர மோடி, நவராத்திரி வாழ்த்து தெரிவித்து தனது பேச்சைத்தொடங்கினார். 'பாரத் மாதா கீ ஜே' என்று அவர் தொடங்க, கூட்டமும் அதைமுழங்கியது. மோடி பேசியதாவது:–

ஒரு காலத்தில் பாம்பு பிடிப்பவர்களின் பூமியாக கருதப்பட்ட இந்தியாவை தற்போதைய நிலைக்கு உயர்த்தியதற்காக உங்களுக்கு பாராட்டுதெரிவித்துக் கொள்கிறேன்.

முன்பொரு முறை நான் தைவான் நாட்டுக்கு சென்றிருந்தேன். அங்கு, இன்னும் பாம்பு பிடிப்பவர்களின் பூமியாகத் தான் இந்தியா இருக்கிறதா? என்று என்னிடம் கேட்கப்பட்டது. அதற்கு நான், 'எங்கள் முன்னோர்கள் பாம்புடன் விளையாடினர். இப்போதைய இளைஞர்கள் மவுஸ் (கம்ப்யூட்டர் மவுஸ்) உடன் விளையாடி கொண்டிருக்கிறார்கள்' என்று பதில் அளித்தேன்.

இந்தியா மற்றும் அமெரிக்காவின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட இந்தியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உங்களை நான் கைவிட மாட்டேன்.

21–ம் நூற்றாண்டு, ஆசியாவின் நூற்றாண்டாக இருக்கும். இன்றைய இந்தியாவில் 65 சதவீதத்துக்கும் அதிகமானோர் , 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக உள்ளனர். எனவே, இந்தியா மிகவேகமாக முன்னேறும்.
பிரதமராகப் பதவியேற்ற நாளில் இருந்து தொடர்ச்சியாக பதினைந்து நிமிடங்களுக்கு கூட ஓய்வு, ஒழிச்சல் இல்லாமல் பணியாற்றி வருகிறேன்.

எனது அரசு, 100 சதவீத மக்கள் நல அரசாகசெயல்படும். எனது அரசு மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வீணடிக்கமாட்டேன். 2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும், சொந்தமாக ஒருவீடு இருக்கும் நிலைமையை உருவாக்குவதே எனது கனவாகும். 21ஆம் நூற்றாண்டில் உலக நாடுகளை யெல்லாம் முன்னெடுத்து செல்லும் நாடாக நம்தேசத்தை உருவாக்குவோம்.

வெளிநாடு வாழ் இந்தியர்களை எந்த காரணத்துக்காகவும் கைவிட மாட்டேன். தற்போது நடைமுறையில் உள்ள இந்தியா வம்சாவளியினர் அடையாள அட்டை (பி.ஓ.எஸ்.) திட்டத்துடன், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (ஓ.சி.ஐ) திட்டம் ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலம், பி.ஓ.எஸ். அடையாள அட்டைதாரர்கள் இந்தியா வருவதற்கான வாழ் நாள் விசா, இனி வழங்கப்படும்.

அமெரிக்க குடியுரிமைபெற்ற இந்தியர்களுக்கு நீண்ட நாள் விசா வழங்கப்படும். இந்தவிசாவில் தங்கியிருப்போர் இனி தங்களைப் பற்றிய விவரங்களை காவல் துறையிடம் தெரிவிக்க வேண்டியதில்லை. இந்தியா வந்தடையும் அமெரிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு உடனடியாக விசா வழங்குவதுடன் நீண்ட நாள் சுற்றுலா விசா வசதியும் அளிக்கப்படும்.

கங்கை நதி தூய்மைப்படுத்தும் திட்டத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கெடுக்க முன் வரவேண்டும் அபிவிருத்தியை ஒருமக்கள் இயக்கமாக ஆக்குவது தான் எங்கள் நோக்கம். ஜனநாயகம், மக்கள் தொகை, தேவை ஆகியவை தான் இந்தியாவின் 3 முக்கிய பலங்கள். அவை தான் இந்தியாவை புதிய உயரத்துக்கு இட்டுச்செல்லும்.

செவ்வாய் கிரகத்துக்கு முதல் முயற்சியிலேயே சென்ற ஒரேநாடு இந்தியாதான். ஆட்டோவில் செல்ல கி.மீட்டருக்கு 10 ரூபாய் செலவாகும். ஆனால் செவ்வாய் கிரகத்துக்கு செல்ல கி.மீட்டருக்கு 7 ரூபாய் தான் செலவாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நரேந்திரமோடி பேசிய மாடிசன் ஸ்கொயர் கார்டன் அரங்கம், உலகிலேயே மிக ஆடம் பரமான 10 உள் விளையாட்டு அரங்கங்களில் ஒன்றாகும். அது, 31வது தெருவில் இருந்து 33–வது வரை பரந்துவிரிந்து உள்ளது. அந்த அரங்கத்தில், பொதுவாக பிரமாண்ட இசைகச்சேரிகளும், விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடப்பது வழக்கம். அதில், மறைந்த பாப்பாடகர் மைக்கேல் ஜாக்சன், மடோனா, எல்விஸ் பிரஸ்லி ஆகியோர் கச்சேரி நடத்தி உள்ளனர்.

இத்தகைய புகழ்பெற்ற அரங்கத்தில் நரேந்திரமோடி பேசினார். அதில், பல்லாயிரக்கணக்கான அமெரிக்க இந்தியர்களும், நூற்றுக்கணக்கான முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர். அவர்களில் ஒரு மாகாண கவர்னர், 45 அமெரிக்க எம்.பி.க்கள் ஆகியோரும் அடங்குவர். மோடி பேசும் போது, மக்கள் அடிக்கடி கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடை, 360 டிகிரி கோணத்தில் சுழலக் கூடியது. நிகழ்ச்சியில் பங்கேற்று மோடி உரையை கேட்பதற்காக, பலமணி நேரத்துக்கு முன்பே, ஏராளமான இந்தியர்கள் வரிசையில் நின்றனர். அவர்கள் இந்தியபாரம்பரிய உடை அணிந்திருந்தனர்.

மோடியின் உரையை பலரும் பார்ப் பதற்காக, விழா அரங்கம் மட்டுமின்றி, 50 இடங்களில் நேரடி ஒளிபரப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்தநிகழ்ச்சியில், ஏ.ஆர்.ரகுமானின் 'வந்தே மாதரம்' பாடல் இசைக்கப்பட்டது. பிரபல பாடகி கவிதா கிருஷ்ண மூர்த்தி சினிமா பாடல்களைப் பாடினார்.

Leave a Reply