வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை பிரதமர் நரேந்திரமோடி செவ்வாய்க் கிழமை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து, தலைவர்கள் இருவரும் புதன்கிழமை (அக்.1) அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளிடையேயான பொருளாதார, பாதுகாப்பு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதுகுறித்து அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

முன்னதாக, வெள்ளை மாளிகையில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த மோடியை, ஒபாமா நேரில்வரவேற்றார். அப்போது மோடியிடம், அவரது தாய் மொழியான குஜராத்தியில், "எப்படி உள்ளீர்கள்?' என்று ஒபாமா நலம் விசாரித்தார். அதற்கு அவரிடம் "மிகவும் நன்றி, அதிபர்' என்று மோடி தெரிவித்தார்.

விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்க துணை அதிபர் ஜோபிடன், வெளியுறவு அமைச்சர் ஜான்கெர்ரி, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட குறிப்பிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். ஒபாமாவின் மனைவி மிஷல் வெளியூர் சென்றிருந்ததால், இதில் பங்கேற்க இயலவில்லை.

பிரதமர் மோடி, நவராத்திரி விரதம் இருந்தகாரணத்தால், உணவு எதையும் எடுத்து கொள்ளவில்லை. சூடான குடிநீர்மட்டுமே அவர் பருகினார்.

இந்தச் சந்திப்பின் போது, தொழில்நுட்பம், மின்னனு நிர்வாகம், ஆப்கானிஸ்தான் விவகாரம், எபோலா நோய் உள்ளிட்டவை குறித்து ஒபாமாவும், மோடியும் பேசினர். ஒபாமாவுக்கு தனது தனிப்பட்ட பரிசுகளாக மகாத்மாகாந்தி தொகுத்த "கீதா பை காந்தி' என்ற புத்தகத்தையும், மறைந்த அமெரிக்கத் தலைவர் மார்டின் லூதர்கிங் இந்தியா வந்தபோது எடுக்கப்பட்ட புகைப் படம், அவரது ஒளி, ஒலிகள் அடங்கிய பதிவுகளை மோடி அன்பளிப்புகளாக வழங்கினார்.

Leave a Reply