எல்லைப் பகுதியில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடும் பாகிஸ்தானுக்கு தக்கபதிலடி கொடுக்கும் வகையில், சுதந்திரமாக செயல்படும் அதிகாரத்தை மத்திய அரசு ராணுவத்துக்கு வழங்கியுள்ளது.

எல்லை பகுதியில் கடந்த சிலநாட்களாக பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடுமையான தாக்குதலை நடத்திவருகிறது. கடந்த 2003ம் ஆண்டு இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து, மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது. கடந்த திங்கட் கிழமை இரவு முதல் தற்போதுவரை, பாகிஸ்தான் தாக்குதலுக்கு இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர் . 30க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இது வரை இல்லாத அளவில், பாகிஸ்தானின் இந்த தாக்குதலால் மத்திய அரசு கடும் எரிச்சல் அடைந்துள்ளது. இதையடுத்து இந்தபிரச்னையை கையாளும் பொறுப்பை, தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் பிரதமர் மோடி ஒப்படைத்துள்ளார்.டில்லியில் உள்ள நார்த் பிளாக்கில் நடந்த கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர், உளவுத் துறை (ஐ.பி.,) தலைவர், எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு தக்கபதிலடி கொடுப்பது என முடிவெடுக்கப்பட்டது.

இதற்கு ஏதுவாக இந்திய ராணுவத்திற்கு சுதந்திரமாக முடிவெடுக்கும் அதிகாரம் அளிக்கவும் முடிவு செய்யப் பட்டது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் நிலைகள் மீது இந்திய ராணுவம் அதிரடிதாக்குதல் நடத்தியது. 37 பாகிஸ்தான் நிலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 15 பேர் கொல்லப் பட்டனர். மேலும் 30க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து டில்லியில் நிருபர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், எல்லையில் அத்து மீறலில் ஈடுபடும் பாகிஸ்தானுக்கு தக்கபதிலடி தரப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply