மூத்த இதழாளரும், பிரசார் பார முன்னாள் தலைவருமான எம்வி.காமத் (93), மணிப்பாலில் உள்ள தனியார் மருத்துவ மனையில் உயிரிழந்தார்.

இவரது முழுப்பெயர், மாதவ் விட்டல் காமத். இந்தியாவின் உயரிய தேசியவிருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருதை பெற்றவர். இதுவரை 45க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார் .

மும்பையில், 1946ம் ஆண்டு 'தி ஃபிரீ பிரஸ் ஜர்னல்' பத்திரிகையில் நிருபராக தனது பத்திரிகை வாழ்க்கையை தொடங்கிய காமத், 60 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைதுறையில் அனுபவம் வாய்ந்தவர்.

1955 முதல் 1958 வரை ஐக்கிய நாடுகளில் பிடிஐ-க்கு (பிரெஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா) சிறப்பு செய்தியாளராகவும் பணி புரிந்துள்ளார். மேலும், இல்லஸ் டிரேடட் வீக்லி ஆஃப் இந்தியா, ஃபிரீ பிரெஸ் புல்லட்டின், பாரத் ஜோதி, ஆகிய பத்திரிகைகளுக்கு ஆசிரியராகவும், ஃபிரீ பிரஸ்ஜர்னல் பத்திரிகையில் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றி உள்ளார் . அத்துடன் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு ஐரோப்பிய செய்தியாளராகவும் வாஷிங்டன் செய்தியாளராகவும் பணிபுரிந்திருக்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள் நாடு விடுதலையடைந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளர்களில் இன்றுவரை உயிரோடு இருந்தவர், இவர் ஒருவரே.

எம்.வி. காமத் மறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;
சிறந்த எழுத்தாளர் மற்றும் சிறந்தமனிதரான எம்.வி. காமத் மறைவு, ஊடக உலகுக்கு இழப்பாகும். அவருடைய ஆத்மா சாந்தியடைய நான் பிராத்திக்கிறேன். எம்.வி. காமத் அவர்களுடன் நான்கொண்ட பல்வேறு உரையாடல்களை நினைவு கூர்கிறேன். மனிதநேயம் கொண்ட அவர் அறிவுத் திறனின் வங்கி.
இவ்வாறு பிரதமர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

எம்.வி.காமத் மறைவுக்கு தமிழ்த் தாமரை தனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

Leave a Reply