"ஹரியாணா மக்கள், குடும்ப அரசியலை ஒதுக்கித்தள்ள வேண்டும்'' என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

ஹரியாணாவில் வரும் 15ம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்குள்ள சிர்ஸாநகரில் சனிக் கிழமை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது:

ஐந்து குடும்பங்கள் தான் தற்போது வரை ஹரியாணா நிர்வாகத்தை நடத்திவந்துள்ளன. இதனால் இந்தக் குடும்பங்கள் தான் பயனடைந்துள்ளன. மாநிலத்தில் அமைந்துள்ள கூட்டணிகளை பாருங்கள். அவை உலக மல்யுத்த வீரர்கள்போல் மக்கள் முன் மோதிக்கொள்கின்றன.

ஒருகுடும்பம் ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி நடத்தவேண்டும்; அப்போது மற்றொரு குடும்பம் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து விமர்சிக்க வேண்டும் என்று இந்தக் கூட்டணி களிடையே ஓர் ஒப்பந்தம் இருக்கிறது.

அடுத்ததேர்தலில் மற்றொரு குடும்பம் ஆட்சிக்கு வரும். இது சக்கரம்போல் சுழற்சிமுறையில் நடைபெற்றுக் கொண்டே போகும். நீங்கள் தான் (மக்கள்) இந்தவாரிசு அரசியலையும், அராஜகத்தையும் ஒதுக்கித்தள்ளி, ஹரியாணாவைக் காப்பாற்றவேண்டும்.

ஹரியாணாவின் சிர்ஸா பகுதி ஒரு தீவைப்போல் உள்ளது. இது மாநிலத்தின் மற்றபகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நகருக்கு ஒருங்கிணைந்த வளர்ச்சியும், ரயில்வே, சாலை, இணைய தளம் ஆகிய தொடர்புகளும் அவசியம்.

மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தப்பகுதியின் வளர்சிச்சிக்கு சிறப்பு மாதிரி திட்டத்தைக் கொண்டுவரும். ராணுவத்தினருக்கு ஒரேபதவி-ஒரே ஓய்வூதியம் என்ற வாக்குறுதியை நாங்கள் பிரசாரத்தின் போது முன்வைத்தோம். அதை மத்திய அரசு வெற்றிகரமாக அமல்படுத்தி வருகிறது.

கருத்து கணிப்புகள் மூலம் சாதகமான தகவல்கள் வந்து கொண்டிருக் கின்றன. ஹரியாணாவில் பாஜக தனிப் பெரும் கட்சியாக வரும் என்றோ பெரும்பான்மை பலம்பெறும் என்றோ அனைத்துக் கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன.

மாநிலத்தில் அடுத்து அமையப்போவது பாஜக அரசு தான் என்பது நிச்சயம். ஆனால், பாஜக.,வுக்கு அறுதிப் பெரும்பான்மையுடன் கூடிய அரசு அமையுமா என்பதை முடிவுசெய்யப் போவது நீங்கள்தான் (மக்கள்). ஹரியாணா முன்னேற்றம் பெற பாஜகவுக்கு வாக்களிப்பதைத் தவிர வேறுவழியில்லை என்றார் மோடி.

Leave a Reply