மராட்டியம், அரியானா மாநில சட்ட சபைகளுக்கான தேர்தல்பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது. இந்த 2 மாநிலங்களிலும் ஒரேகட்டமாக 15–ந் தேதி (புதன்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது.

மராட்டியம், அரியானா மாநில சட்டசபைகளுக்கு 15–ந் தேதி (புதன்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. மராட்டியத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.

இதேபோல் அரியானா மாநிலத்தின் 90 சட்ட சபை தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. மராட்டிய சட்டசபை தேர்தல்களத்தில் 5 முனை போட்டி நிலவுகிறது.

சட்ட சபை தேர்தலில் மொத்தம் 4 ஆயிரத்து 117 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்மந்திரி பிரிதிவிராஜ் சவான், தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் துணை முதல்–மந்திரி அஜித் பவார், பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வினோத் தாவ்டே, ஏக் நாத் கட்சே, மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேயின் மகள் பங்கஜா ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்கள் ஆவர்.

ஆனால் முதல்–அமைச்சர் பதவியை குறி வைத்து இருக்கும் சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே, மராட்டிய நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிடவில்லை.

கடந்த மாதம் 27ந் தேதி வேட்புமனு தாக்கல் முடிந்ததை தொடர்ந்து தேர்தல்பிரசார திருவிழா களைகட்ட தொடங்கியது.

பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4ந் தேதி பிரசாரத்தை தொடங்கினார். அன்றுமுதல் ஓரிரு நாட்களை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் தீவிரபிரசாரம் செய்தார். நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 பொதுக் கூட்டங்களில் பேசி ஆதரவு திரட்டினார்.

அரியானாவில் காங்கிரஸ், பா.ஜ.க, இந்திய தேசிய லோக் தளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல்பிரசாரம் மேற்கொண்டன. இங்கு ஆட்சியை கைப்பற்றுவதற்கு இந்த 3 கட்சிகள் இடையேயும் கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணியுடன் மராட்டியம், அரியானா மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் ஓய்கிறது.

இதனால் இன்று தலைவர்களும், வேட்பாளர்களும் தங்களது கடைசிக்கட்ட பிரசாரத்தை செய்ய உள்ளனர். இதனைதொடர்ந்து தலைவர்கள், வேட்பாளர்கள் பொதுக் கூட்டங்களில் பேசவோ, ஊர்வலங்களாக செல்லவோ தேர்தல்கமிஷன் தடை விதித்துள்ளது. ஆனால் வீடுவீடாக சென்று வாக்குசேகரிக்கலாம்.

Leave a Reply