இந்தியாவில் நடந்துமுடிந்த மஹாராஷ்ட்ரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பகட்ட வெற்றி விவரங்கள் காலையில் இருந்து வெளியாகிவருகின்றன. அவை இரு மாநிலங்களிலுமே மத்தியில் ஆளும் பாஜக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்பதை காட்டுகின்றன.

மஹாராஷ்ட்ராவின் மொத்தமுள்ள 288 இடங்களில் 287 இடங்களுக்கான முன்னணி நிலவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி பாஜக 115 இடங்களிலும், சிவசேனா 61 இடங்களிலும், காங்கிரஸ் 48 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 3 9 இடங்களிலும், மற்ற கட்சிகள் 20 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.

ஹரியானாவில் மொத்தமுள்ள 90 இடங்களுக்கான முன்னணி நிலவரங்களும் வெளியாகத்துவங்கியுள்ளன. அதன்படி பாஜக 51 இடங்களிலும், இந்திய தேசிய லோக்தள் 17 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.

இந்த போக்கு இப்படியே நீடித்து இறுதி முடிவுகளாகவும் மாறும்பட்சத்தில் ஹரியானாவில் பாஜக தனியாகவே ஆட்சியமைக்கும். மஹாராஷ்ட்ராவில் சிவசேனை அல்லது வேறு கட்சியுடன் கூட்டணி அரசு அமைக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.

மேலும் அரியானாவை பொறுத்தவரையில், முதன் முதலாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பாஜக.,வுக்கு கிடைத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக.,வின் செய்திதொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசேன், 'அரியானா, மகாராஷ்ட்ரா சட்டசபை தேர்தல் முடிவுகள், பிரதமர் நரேந்திர மோடி மீது அம்மாநில மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது,' என்றார்.

Leave a Reply